தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/ அரசு சிற்பக்கல்லுாரியில் 90 சதவீத ஆசிரியர் பற்றாக்குறை; ஆசியாவின் ஒரே கல்லுாரியில் முதல்வரும் இல்லை

அரசு சிற்பக்கல்லுாரியில் 90 சதவீத ஆசிரியர் பற்றாக்குறை; ஆசியாவின் ஒரே கல்லுாரியில் முதல்வரும் இல்லை

அரசு சிற்பக்கல்லுாரியில் 90 சதவீத ஆசிரியர் பற்றாக்குறை; ஆசியாவின் ஒரே கல்லுாரியில் முதல்வரும் இல்லை

4


ADDED : ஜூன் 12, 2026 07:48 AM

Follow on GoogleFavourite on Google

4

ADDED : ஜூன் 12, 2026 07:48 AM


4
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் அமைந்துள்ள அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லுாரியில், முதல்வர் உட்பட 90 சதவீத ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், கல்லுாரியின் முக்கியத்துவம் உணராத அதிகாரிகளால் சீரழிந்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கலைக்கு எந்த சம்பந்தமும் இல்லாத கட்டடமும், பராமரிப்பில்லாத வளாகமும் இதற்கு உதாரணம் என, சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கி.பி., 7 முதல் 8ம் நுாற்றாண்டுகளில் ஆண்ட பல்லவ மன்னர்கள், மாமல்லபுரம் பாறைகுன்றுகளில் கற்றளி, புடைப்பு, குடவரை, கோவில் கட்டுமானம் ஆகிய சிற்பக்கலைகள் படைத்துள்ளனர். அக்கால பாரம்பரிய சிற்பக்கலை, தற்காலத்திலும் சிறந்து விளங்குகிறது.

1957ல் துவக்கம்

இக்கலையை தற்காலத்திலும் பயிற்றுவிக்க, அரசு கட்டட, சிற்பக்கலைக் கல்லுாரி செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் கடந்த 1957ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது, தமிழக கலை மற்றும் பண்பாட்டுத் துறையின்கீழ் இயங்கி வருகிறது.

இக்கல்வி நிறுவனம், அழிந்து வரும் பாரம்பரிய மரபு கலைகளான கோவில் கட்டடக் கலை மற்றும் சிற்பக்கலையை மீட்டெடுத்து, மாணவர்களுக்கு முறையாகக் கற்றுத்தருகிறது. தமிழகத்தின் பாரம்பரியமிக்க மரபுக்கலைகளை கற்றுக் கொடுப்பதில் முதன்மையானதாக மாறியது. ஆசியாவின் ஒரே மரபுக்கலை கல்லுாரி என்ற பெருமையையும் பெற்றது.

மரபு கட்டடக்கலையில் பி.டெக்., கல், சுதை, உலோகம், மரம் ஆகிய சிற்பக்கலை பிரிவுகள்; பி.எப்.ஏ., மரபு வண்ணம் மற்றும் ஓவியம் என, தலா நான்காண்டு பட்ட படிப்புகள் உருவாக்கப்பட்டன. இப்படிப்புகளில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர் சேரலாம்; தற்போது 227 பேர் பயில்கின்றனர்.

பாரம்பரிய கலைகள் பயில ஏராளமானோர் ஆர்வம் காட்டும் சூழலில், ஓய்வுபெற்ற விரிவுரையாளர், பயிற்றுநர் காலி பணியிடங்களுக்கு, மீண்டும் ஆசிரியர்கள் நியமிக்கப்படாமல் பல ஆண்டுகளாகவே காலியாக உள்ளது.

நடப்பு கல்வியாண்டில், மரபு கட்டடக்கலை பிரிவில் - 10; கற்சிற்ப பிரிவில் - 10; சுதைச்சிற்ப பிரிவில் - 15; உலோக சிற்ப பிரிவில் - 5; மரச்சிற்ப பிரிவில் - 10; வண்ணம் மற்றும் ஓவியம் பிரிவில் - 10 என, மொத்தம் 60 மாணவர்கள் சேர்க்கை இடங்கள் உள்ளன.

50 காலி பணியிடம்

கல்லுாரி முதல்வர், விரிவுரையாளர், பயிற்றுநர், பிற ஊழியர்கள் என, மொத்தம் 67 பணியிடங்கள் உண்டு. கடந்த 2015ல், கல்லுாரியின் முதல்வர் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, 11 ஆண்டுகளாக பொறுப்பு முதல்வரே நிர்வகிக்கிறார். மூன்று விரிவுரையாளர்கள், இரண்டு பயிற்றுநர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். ஆசிரியர் பணியிடங்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாகவே உள்ளன. நடப்பாண்டிற்கும், பகுதிநேர ஆசிரியர்கள் 10 பேரை நியமிக்க, விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முக்கியத்துவம் உணராத அதிகாரிகளால் கல்லுாரி சீரழிந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கலைக்கு எந்த சம்பந்தமும் இல்லாத பாழடைந்தது போன்ற கட்டடமும், பராமரிப்பில்லாத வளாகமும் இதற்கு உதாரணம் என, அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அடிப்படை வசதிகள் இல்லாமல், மாணவ - மாணவியர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கல்வியின் தரமும் கேள்விக்குறியாக மாறி வருகிறது. ஏற்கனவே, இளநிலை படிப்புகளே திண்டாட்டத்தில் செல்லும் நிலையில், முதுநிலை படிப்புகள் தொடங்க அரசிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து கல்லுாரி மாணவர்கள் கூறியதாவது: ஆசியாவின் ஒரே மரபுக்கலை கல்லுாரி என்ற பெருமை மட்டும் தான், தற்போது இக்கல்லுாரிக்கு உள்ளது; 90 சதவீத ஆசிரியர்கள் இல்லை. படிப்பதற்கு மிகவும் சிரமப்படுகிறோம். ஒவ்வொரு ஆண்டும், பகுதிநேர ஆசிரியர்கள் சிலரை நியமிக்கின்றனர்.

அவர்களும் இடையில் விலகி விடுகின்றனர். இந்த நிலைமையில், எப்படி படித்து, தேர்வு எழுத முடியும் பெயரளவில்தான் செயல்படுகிறது. பழைய கட்டடங்கள் பாழடைந்துள்ளன. குடிநீர், கழிப்பறை வசதிகளும் போதுமானதாக இல்லை. கல்லுாரி பகுதியே புதராக உள்ளது. கல்லுாரியின் சிறப்பு கருதி, ஆசிரியர்களை நியமிக்கவும், வசதிகள் மேம்படுத்தவும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அனுமதிக்கு காத்திருப்பு

இங்கு காலியாக உள்ள ஆசிரிய பணியிடங்களுக்கும், மற்ற பணியிடங்களுக்கும், ஆட்களை நியமிக்குமாறு அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அரசு தான் முடிவெடுக்க வேண்டும். புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட உள்ளன. கடலோர மேலாண்மை அனுமதி கிடைத்ததும் கட்டுமானப் பணிகள் துவக்கப்படும். - கல்லுாரி நிர்வாகத்தினர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us