ஜூலையில் ராகுல் தமிழகம் வருகை; காங்.,கில் புதிய நிர்வாகிகள்?
ஜூலையில் ராகுல் தமிழகம் வருகை; காங்.,கில் புதிய நிர்வாகிகள்?
ADDED : ஜூலை 09, 2026 04:29 AM

சென்னை: தமிழக காங்கிரசில், புதிய மாநில நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பாளர்கள் நியமன பட்டியலுக்கு, மேலிடத்தின் ஒப்புதல் பெற, தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், டில்லி சென்றுள்ளார்.
தமிழக காங்., தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மாணிக்கம் தாகூர், கட்சியின் அனைத்து கோஷ்டி தலைவர்களின் ஆதரவாளர்களுக்கும் வாய்ப்பளிக்கும் வகையில், புதிய மாநில நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களை நியமிக்க உள்ளார்.
இதையடுத்து, புதிய நிர்வாகிகள் பெயர் பட்டியலுடன், நேற்றுமுன்தினம் டில்லி சென்று உள்ளார். அங்கு, கட்சி உள்கட்டமைப்பு சீரமைப்பு, மாவட்ட தலைவர்கள் பயிற்சி முகாம், உள்ளாட்சி தேர்தல் பணி உள்ளிட்டவை குறித்து, டில்லி மேலிட தலைவர்களிடம், மாணிக்கம் தாகூர் ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்நிலையில், மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள கட்சியின் மாவட்ட தலைவர்கள் பயிற்சி முகாமில், லோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுல் பங்கேற்க உள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையில், 'வரும் 22 முதல் 31ம்தேதி வரை, மாமல்லபுரத்தில், காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுக்கு 10 நாள் பயிற்சி முகாம் நடக்கிறது.
'அதில் ஒரு நாள், ராகுல் பங்கேற்று, தன் ஆலோசனைகளையும், கருத்துகளையும் பகிர்ந்து கொள்கிறார்' எனக் கூறியுள்ளார்.
