தேச நலனுக்காக சியாம பிரசாத் முகர்ஜி விதைத்த வித்துக்கள்
தேச நலனுக்காக சியாம பிரசாத் முகர்ஜி விதைத்த வித்துக்கள்
ADDED : ஜூலை 05, 2026 03:55 AM

மத்திய அரசு, மகத்தான தேசபக்தரான டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜியின் 125வது பிறந்த ஆண்டை, அவரது நினைவு நாளான ஜூன் 23 முதல், பிறந்த நாளான ஜூலை 6 வரை கொண்டாடி வருகிறது.
நம் தேசம் சுதந்திரம் பெற்றும், நெடுங்காலமாக இடதுசாரி பார்வையிலேயே நம் வரலாறு பதிவு செய்யப்பட்டு வந்தது. மாற்றுக்கருத்துக் கொண்ட ஆளுமைகள் இருட்டடிப்பு செய்யப்பட்டனர். அப்படி மறைக்கப்பட்ட ஒருவர் தான் டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி. இன்றைய பாரதிய ஜனதா கட்சிக்கு வித்திட்டவர் இவர் தான்.
காங்கிரஸ் கட்சியில் முக்கிய பதவியில் இருந்தது மட்டுமல்லாது, காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மத்திய அமைச்சராகவும் இருந்த இவர், ஏன் அதிலிருந்து விலகினார்? ஏன் மாற்று அரசியல் பாதையை தேடினார்? அவரது வாழ்க்கையை நினைவு கூறி அறிந்துகொள்வோம்.
இளம் பருவம்
கடந்த 1901ல் வங்காளத்தில் பிறந்த சியாம பிரசாத் முகர்ஜி, இங்கிலாந்தில் சட்டம் படித்து, இங்கு வழக்கறிஞராக பணியாற்றினார். தனது 28வது வயதில், கல்கத்தா பட்டதாரிகள் தொகுதியில் சட்ட மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 33வது வயதிலேயே கொல்கட்டா பல்கலையின் துணைவேந்தரானார்.
இரண்டு முறை அந்த பொறுப்பை வகித்த அவர், உயர் கல்வி துறையில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே முக்கியமான மாற்றங்களைக் கொண்டு வந்தார். நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூரை அழைத்து, பல்கலையில், முதன் முதலாக வங்க மொழியில் பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்த வைத்தார்.
தேசத்தின் பண்டைய வரலாறு, பண்பாடு குறித்த பாடங்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். உண்மையான வரலாற்றை மாணவர்கள் ஆய்ந்து அறிந்து கொள்ளும் நோக்கில், அகழ்வாராய்ச்சி துறையைக் கொண்டு வந்தார்.
கடந்த 1930களில், ஆங்கிலேய அரசு கொண்டு வந்த சட்டத்தின் விளைவாக, வங்காளத்தில் முஸ்லிம் லீக் அரசு பதவிக்கு வந்தது. அப்போது, தகுதி வாய்ந்தவர்களாக இருந்தும், இந்துக்களுக்கு அரசு துறைகளில் வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டன. பல வகைகளில் இந்துக்கள் துன்புறுத்தப்பட்டனர். அந்த சூழலில், அங்கிருந்த முக்கியஸ்தர்கள் டாக்டர் முகர்ஜியை அரசியலுக்கு வருமாறு அழைத்தனர்.
அரசியல் பணி அவர், ஆரம்பத்தில் இந்து மகாசபையில் இணைந்து பணியாற்றினார். அதை காந்திஜி வரவேற்று, மதன்மோகன் மாளவியாவுக்கு பின், இந்துக்களுக்கு தலைமை தாங்கி நடத்த முகர்ஜி வந்திருப்பது நல்லது என கூறினார். பின்னர், வங்காளத்தில் கூட்டணி ஆட்சி ஏற்பட்டபோது நிதி அமைச்சராகப் பணியாற்றி சமூக நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கினார்.
கடந்த 1940களில், வங்காளத்தில், இந்துக்களுக்கு எதிராக வன்முறைகள் நடந்த போது, பிற அரசியல் கட்சி தலைவர்கள், அங்கு செல்ல தயங்கினர். அங்கெல்லாம் முதல் ஆளாக சென்று உண்மைகளை வெளிக்கொணர்ந்தார் முகர்ஜி. 1946 ஆகஸ்ட் மாதம், முஸ்லிம் லீக் கட்சி, நேரடி நடவடிக்கை நாள் என அனுசரித்தது.
அப்போது, கொல்கட்டாவில் இந்துக்கள் குறிவைத்து தாக்கப்பட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் வீடுகளை இழந்தன. பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டனர். அங்கு, முகர்ஜி பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராடினார்.
அமைச்சரவையில்...
பின்னர், 1946ல் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார். 1947ல் சுதந்திரத்துக்கு பின்னர் அமைந்த மத்திய அமைச்சரவையில், நம் தேசத்தின் முதல் தொழில் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அவர் காலத்தில் தான் முதல் தொழில் கொள்கை வெளியிடப்பட்டது. சித்தரஞ்சன் ரயில் தொழிற்சாலை உள்ளிட்ட பல பெரிய திட்டங்கள் தொடங்கப்பட்டன. தொழில்களுக்கு நிதி உதவி செய்யும் நோக்கில், இந்திய நிதி அமைப்பு தொடங்கப்பட்டது.
அப்போது, பாகிஸ்தானில் இந்துக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை தடுத்து நிறுத்த, போதிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் நேருவுக்கு அவர் பலமுறை வேண்டுகோள் விடுத்தார். நேரு, பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலி கானுடன் ஒரு ஒப்பந்தம் மட்டுமே போட்டார். அது போதுமானதல்ல என எதிர்ப்பு தெரிவித்து, அமைச்சரவையில் இருந்து பதவி விலகினார்.
பாரதிய ஜன சங்கம்
நேருவின் போலி மதச்சார்பின்மையும் தவறான வெளியுறவு கொள்கைகளும் உறுத்தலாக இருந்தன. காங்கிரஸ் கட்சியால் நாட்டு மக்களின் நலன்களை பாதுகாக்க முடியாது என அவர் உறுதியாக நம்பத் தொடங்கினார். அதனால், காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக, நம் நாட்டின் பண்பாடு அடிப்படையில் அமைந்த ஒரு தேசிய கட்சி தேவை என கருதி, 1951ல் பாரதிய ஜன சங்க கட்சியை தொடங்கினார்.
சுதந்திரத்துக்குப் பின்னர் நடந்த முதல் பொதுத் தேர்தலில், பாரதிய ஜன சங்க கட்சி சார்பில் டாக்டர் முகர்ஜி உள்ளிட்ட மூன்று பேர் வெற்றி பெற்றனர். பிற சிறிய கட்சிகளை சேர்த்துக் கொண்டு, நேருவின் தவறான கொள்கைகளை, பார்லிமென்டில் கடுமையாக எதிர்த்தார்.
முன்னதாக, பிரதமர் நேரு, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு 370 மற்றும் 35 ஏ பிரிவுகள் மூலம் சிறப்பு அங்கீகாரம் கொடுக்க முடிவு செய்த போது, டாக்டர் முகர்ஜி மற்றும் டாக்டர் அம்பேத்கர் உள்ளிட்டோர் தீவிரமாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால், நேரு அவர்களின் கருத்துக்களை புறந்தள்ளி, அவற்றை சட்டமாக்கினார். ஒரே நாட்டில் எப்படி இரண்டு கொடிகள், இரண்டு வித சட்டங்கள், இரண்டு பிரதமர்கள் இருக்க முடியும் என முகர்ஜி கேள்வி எழுப்பினார்.
மேலும், அந்த மாநிலத்துக்குள் நுழைவதற்கு மற்ற மாநில மக்கள் அனுமதிச் சீட்டு வாங்க வேண்டும் என நடைமுறை வந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 1953 மே மாதம், அனுமதி சீட்டு பெறாமல், அவர் ஜம்மு- - காஷ்மீர் மாநிலத்துக்குள் சென்றார். அங்கு கைது செய்யப்பட்டு, வீட்டுக் காவல் சிறையில் வைக்கப்பட்டார். சில வாரங்களில், உடல்நிலை மோசமாகி, ஜூன் 23ம் தேதி காலமானார். அப்போது அவருக்கு வயது 52.
சாதனைகள் அளப்பரிய தேசபக்தரான சியாம பிரசாத் முகர்ஜி ஆற்றிய மூன்று முக்கிய பணிகள் என்றும் நிலைத்து நிற்பவை.
முதலாவது, ஜம்மு - காஷ்மீர் மாநிலம் நம் தேசத்துடன் முழுமையாக ஒருங்கிணைய அவர் தொடங்கி வைத்த நடவடிக்கைகள். அவர் எச்சரித்தபடியே அங்கு பிரிவினைவாதம் வளர்ந்து 1990களில் தேசத்தையே உலுக்கியது. 2019ல், பிரதமர் மோடி தலைமையிலான அரசு முகர்ஜி தொடங்கிய பணியை முடித்து, ஜம்மு - காஷ்மீரை நம் தேசத்துடன் முழுமையாக ஒருங்கிணைத்தது.
இரண்டாவதாக, ஆங்கிலேயர் சூழ்ச்சியாலும், முஸ்லிம் லீக் சூழ்ச்சியாலும், வங்காளத்தின் கீழ் பகுதி, கிழக்கு பாகிஸ்தானாக திட்டமிடப்பட்ட போது, அதில், தற்போது மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள கொல்கட்டா உள்ளிட்ட பல பகுதிகள் இணைக்கப்பட இருந்தன.
அவை அனைத்தும் இந்து பெரும்பான்மை பகுதிகள்.
அதை எதிர்த்து, மக்களை திரட்டி முகர்ஜி பெருமளவில் போராட்டங்களை நடத்தினார். விளைவாக, அந்த பகுதிகள் கிழக்கு பாகிஸ்தானுக்கு (இன்றைய வங்கதேசம்) கொடுக்கப்படாமல், நம் தேசத்தோடு இணைக்கப்பட்டன.
மூன்றாவது, அவர் பாரதிய ஜன சங்கத்தை நிறுவியது. அதுவே இன்றைய பாரதிய ஜனதாவின் முன்னோடி. அது நிறுவப்படாவிட்டால், மேற்கத்திய கூறுகளின் அடிப்படையில் செயல்படும் காங்கிரசுக்கு மாற்றாக, நம் தேசிய கூறுகளின் அடிப்படையில் செயல்படும் மாற்று சக்தி இல்லாமல் போயிருக்கும்.
முகர்ஜி அவர்கள் விரும்பியபடி தேச நலன், கலாசாரம், பாதுகாப்பு, அனைவருக்குமான வளர்ச்சி ஆகிய கொள்கைகளை மையமாகக் கொண்டு வளர்ந்து, இன்று உலகின் மிகப்பெரிய ஜனநாயக கட்சியாக பாரதிய ஜனதா உருவெடுத்துள்ளது.
நாட்டிலுள்ள 22 மாநிலங்களில் தனியாகவும், கூட்டணியாகவும் ஆட்சி செய்து வருகிறது. அதனால் நாடு முழுதும் கலாசார மறுமலர்ச்சியும், அனைவரின் வாழ்வில் முன்னேற்றமும், தேச நோக்கும் ஏற்பட்டு வருகின்றன.
-ப.கனகசபாபதி-
கட்டுரையாளர் அறங்காவலர் மற்றும் செயலாளர், டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி ஆய்வு நிறுவனம், புது டில்லி
