ஈரோட்டில் வரும் 16ல் விஜய் பொதுக்கூட்டம்; அனுமதி அளிப்பதில் போலீஸ் 'கெடுபிடி'
ஈரோட்டில் வரும் 16ல் விஜய் பொதுக்கூட்டம்; அனுமதி அளிப்பதில் போலீஸ் 'கெடுபிடி'
ADDED : டிச 08, 2025 05:23 AM

ஈரோடு: த.வெ.க., தலைவர் விஜய், வரும் 16ம் தேதி, ஈரோட்டில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்குமாறு மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், போலீசார் கெடுபிடி காட்டுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கரூர் உயிரிழப்பு சம்பவத்துக்கு பின், தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் பிரசார பயணம் நிறுத்தி வைக்கப்பட்டது. பின், மீண்டும் பயணத்தை சேலத்தில் துவங்கும் விதமாக திட்டமிடப்பட்டது. ஆனால், போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது.
கலெக்டரிடம் மனு
இதையடுத்து, காஞ்சிபுரத்தில் தனியார் கல்லுாரியில், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை விஜய் நடத்தினார். புதுச்சேரியில் நாளை நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
இதற்கிடையே, அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் விஜய் முன்னிலையில் த.வெ.க.,வில் சேர்ந்தார். அவர், ஈரோட்டில் விஜய் பங்கேற்கும் பொதுக் கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளார்.
த.வெ.க., நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளரான செங்கோட்டையன் நேற்று ஈரோடு கலெக்டர் முகாம் அலுவலகம் சென்று, பொதுக் கூட்டத்துக்கு அனுமதி கேட்டு கலெக்டர் கந்தசாமியிடம் கடிதம் வழங்கினார்; எஸ்.பி., அலுவலகத்திலும் கடிதம் அளித்தார்.

செங்கோட்டையன் மனு அளித்ததை தொடர்ந்து, ஈரோடு -- பெருந்துறை சாலையில், பவளத்தம்பாளையம் பகுதியில் உள்ள 7 ஏக்கர் பரப்பளவிலான இடத்தை, காவல் கண்காணிப்பாளர் சுஜாதா நேற்று ஆய்வு செய்தார்.
அனுமதி மறுப்பு
அதன்பின், 'த.வெ.க., மனுவில், 70,000 பேர் கூடுவர் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் குறிப்பிட்டுள்ள இடம், அந்த அளவு கூட்டத்தையும், வாகனங்களையும் ஏற்கும் அளவுக்கு இல்லை. எனவே, அந்த இடத்தில் அனுமதி மறுக்கப்படுகிறது.
'இந்த தகவல் செங்கோட்டையனிடம் தெரிவிக்கப்பட்டு, வேறு இடத்தை தேர்வு செய்யுமாறு அவரிடம் கூறப்பட்டுள்ளது' என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, விஜய் கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், போலீசார் கடும் கெடுபிடி காட்டுவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இது தொடர்பாக, செங்கோட்டையன் அளித்த பேட்டி: த.வெ.க., தலைவர் விஜய் வரும் 16ல் ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 'ரோடு ஷோ' தவிர்க்கப்பட்டுள்ளது. பகல் 12:௦௦ முதல் மாலை 6:௦௦ மணி வரை கூட்டத்துக்கு அனுமதி கேட்டுள்ளோம்.
பெருந்துறை சாலையில் தனியார் இடம் தேர்வு செய்யப்பட்டு அனுமதி கேட்கப்பட்டுள்ளது. விஜயமங்கலம் டோல்கேட் அருகில், 16 ஏக்கர் நிலத்தை கேட்டுள்ளோம்; வாகனங்கள் நிறுத்த, 10 ஏக்கர் நிலம் கேட்டுள்ளோம். இதேபோல் பவளத்தாம்பாளையத்தில் 7 ஏக்கர் இடத்தையும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தோம்.
இது தவிர, ஒரு மாற்றிடமும் தேர்வு செய்து கடிதம் வழங்கவுள்ளோம். பவளத்தாம்பாளையம் இடத்தை ஒதுக்க போலீசார் அனுமதி மறுத்ததாக வெளியான செய்தி உண்மை இல்லை.
ஈரோட்டில் விஜய் முன்னிலையில் த.வெ.க.,வில் முன்னாள் அமைச்சர்கள் சேருவது பற்றி நான் ஏதாவது கூறினால், அவர்களை வீட்டை விட்டு வெளியேற விடாமல் நிறுத்தி விடுவர். த.வெ.க.,வில் நான் இணையும் போது, நிபந்தனை விதித்ததாக கூறுவது தவறான தகவல். இவ்வாறு அவர் கூறினார்.
புதுச்சேரியில் நிபந்தனை
இதற்கிடையே, புதுச்சேரியில் நாளை விஜய் நடத்தும் பொதுக் கூட்டத்தில் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். தமிழகத்தில் இருந்து வருவோருக்கு அனுமதி இல்லை என போலீசார் தெரிவித்தனர்.

