விசாரணைக்கு ஆஜராகாமல் அவகாசம் கேட்பது ஏன்? தமிழக நிதி அமைச்சருக்கு புதுச்சேரி கோர்ட் கேள்வி
விசாரணைக்கு ஆஜராகாமல் அவகாசம் கேட்பது ஏன்? தமிழக நிதி அமைச்சருக்கு புதுச்சேரி கோர்ட் கேள்வி
UPDATED : ஜூலை 05, 2026 08:08 AM
ADDED : ஜூலை 05, 2026 07:56 AM

புதுச்சேரி: 'சொத்து பிரச்னையில், அண்ணன் - அண்ணியை வீடு புகுந்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த வழக்கில், தமிழக நிதி அமைச்சர், புதுச்சேரி கோர்ட்டில் வரும் 10ம் தேதி கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும்' என, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன், அவரது தந்தை நெஸ்தோர் ஆகியோர் சொத்து தகராறில், 2022 ஆக., 8ல் புதுச்சேரி, எழில் நகரில் வசிக்கும் அவரது அண்ணன் மரியகுலோத், அண்ணி கெரோலின் ஆகியோரை ஆபாசமாக திட்டி, உருட்டுக் கட்டையால் தாக்கியதாக, கெரோலின் லாஸ்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.
அந்த புகாரில், 'என் ஆடைகளை இழுத்து மானபங்கப்படுத்தி, நாங்கள் நடத்தி வரும் செயின்ட் ஆண்டனி பள்ளி நிர்வாகத்தில் தலையிட்டால், மிஷன் வீதியில் நீங்கள் நடத்தி வரும் ரெஸ்டாரண்டை அடித்து நொறுக்கி, குடும்பத்தோடு அனைவரையும் கொலை செய்துவிடுவோம் என, மரிய வில்சன் மிரட்டினார்' என, தெரிவித்திருந்தார்.
ஜாமின்
வழக்கு விசாரணை புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விசாரணைக்கு மரிய வில்சன் ஆஜராகவில்லை. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், நேரில் பெற்றுக்கொள்வதற்காக ஜூலை 4ம் தேதி, நீதிமன்றத்தில் கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என, மாஜிஸ்திரேட் சேரலாதன் நேற்று முன்தினம் உத்தவிட்டிருந்தார்.
நேற்று காலை, 10:30 மணிக்கு, மாஜிஸ்திரேட் சேரலாதன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்த போது, மரிய வில்சன், நெஸ்தோர் ஆஜராகவில்லை. அவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'மரிய வில்சன் தமிழக நிதியமைச்சராக உள்ளதால், விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் தயாரிப்பு தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனையில் உள்ளார். வேலை பளு காரணமாக விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை. இரண்டு வாரம் கால அவகாசம் தேவை' என்றார்.
கட்டாயம்
'அலுவலக ரீதியாக சிரமம் கூடாது என்பதற்காகத்தான் விடுமுறை நாளான இன்று ஆஜராக உத்தரவிட்டேன். 'இன்றும், ஆஜராகாமல் மேலும் 15 நாள் அவகாசம் கேட்கறீர்கள். இதற்கு, அவகாசம் வழங்கினால், மீண்டும் அடுத்த கட்டமாக சட்டசபை கூடும் தேதியை காரணமாக குறிப்பிட்டு, மேலும் அவகாசம் கேட்பீர்கள். வரும் 6 அல்லது 7ம் தேதி ஆஜராக முடியுமா' என, கேட்டார்.
அதற்கு, பதில் அளித்த வழக்கறிஞர், 'அன்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த வேண்டியிருக்கும்' என்றார். மாஜிஸ்திரேட், வரும் 10ம் தேதி கட்டாயம் கோர்ட்டில் ஆ ஜராகி, குற்றப்பத்திரிகை நகல் மற்றும் வழக்கு ஆவணங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை, வரும் 10ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
