கஞ்சா விற்பனை செய்த 5 பேர் கைது 1.5 கிலோ கஞ்சா பறிமுதல்
கஞ்சா விற்பனை செய்த 5 பேர் கைது 1.5 கிலோ கஞ்சா பறிமுதல்
ADDED : ஆக 06, 2026 07:22 PM
புதுச்சேரி: முத்திரையர்பாளையத்தில் கஞ்சா விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்து, 1.5 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுச்சேரி, முத்திரையர்பாளையம் பம்ப் ஹவுஸ் அருகே சிலர் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக மேட்டப்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அப்போது, போலீசார் வருவதை கண்ட 5 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து 2 பைக்குகளில் தப்பி செல்ல முயன்றனர்.
அவர்களை போலீசார் விரட்டி பிடித்து, சோதனை செய்ததில், அவர்கள் கஞ்சாவை சிறு பொட்டலங்களாக பிரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், ரெட்டிச்சாவடி, பூசாரிபாளையம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சேகர் மகன் சர்மா, 19; வீராம்பட்டினம், சிங்காரவேல் நகரைச் சேர்ந்த கமலநாதன் மகன் கோகுல், 18; பூமியன்பேட்டை, ஜவகர் நகரைச் சேர்ந்த சக்திவேல் மகன் நரேந்திரன், 19; ரெட்டியார்பாளையம், லுாயிஸ் ரெட்டியார் தோட்டம், மேரி உழவர்கரையை சேர்ந்த கணேசன் மகன் பிரசன்னா, 19; பூத்துறை, காசிபாளையம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வீரபாலன் மகன் ரோஹித், 18; என்பது தெரியவந்தது.
இதையடுத்து, 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 250 கிராம் கஞ்சா பொட்டலங்கள், 2 பைக், 2 மொபைல்களை பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களிடம் தனித்தனியாக போலீசார் விசாரணை நடத்தியதில், ரெட்டிச்சாவடியை சேர்ந்த சர்மா, தனது வீட்டின் அருகே கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார். அதன்பேரில், அவர் வீட்டின் அருகே வைக்கப்பட்டிருந்த 1 கிலோ 340 கிராம் கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, அவர்கள் மீது வழக்குப் பதிந்த போலீசார், நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட கோகுல் மீது ஒரு கஞ்சா விற்பனை வழக்கும், சர்மா மீது போக்சோ வழக்கும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
