கிராம வேலை உறுதி, வாழ்வாதார திட்டம் முதல்வர் ரங்கசாமி துவக்கி வைப்பு
கிராம வேலை உறுதி, வாழ்வாதார திட்டம் முதல்வர் ரங்கசாமி துவக்கி வைப்பு
ADDED : ஜூலை 02, 2026 09:53 PM
வில்லியனுார்: வளர்ச்சியடைந்த பாரதம், கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டத்தை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.
புதுச்சேரி ஊரக வளரச்சித்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், வளர்ச்சியடைந்த பாரதம், கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்ட துவக்க விழா வில்லியனுாரில் நடந்தது.
ஊரக வளர்ச்சித்துறை அரசு செயலர் கிருஷ்ணமோகன் உப்பு வரவேற்றார். தற்காலிக சபாநாயர் அன்பழகன், அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், சிவகொழுந்து, எம்.எல்.ஏ.,க்கள் சாய்சரவணன்குமார், ரவிக்குமார், மோகன்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், சிறப்பு விருந்தினராக முதல்வர் ரங்கசாமி பங்கேற்று, திட்டத்தை துவக்கி வைத்து பேசியதாவது:
வளர்ச்சியடைந்த பாரதம், கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டம் என்பது கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 125 நாட்கள் வேலை மற்றும் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் மத்திய அரசின் புதிய திட்டமாகும். இத்திட்டத்தால் பொது மக்களுக்கு 100 நாள் வேலையை 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
பணியாளருக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 347 ஊதியம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு தனி நபரின் வருமானம் உயரும். இத்திட்டத்திற்கு மத்திய அரசு ரூ. 40 கோடி ஒதுக்கியுள்ளது. இதில், ரூ.14 கோடி மாநில அரசு நிதியாகும். புதுச்சேரி ஒரு சின்னஞ்சிறு மாநிலம், இங்கு வருவாய் குறைவு என்பதால் மத்திய அரசு 100 சதவீத நிதியை வழங்கவேண்டும் என கேட்டுள்ளோம்’ என்றார்.
தொடர்ந்து மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்ச்சியில் பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் திரளான மகளிர் குழுவினர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் மாணிக்க தீபன் செய்திருந்தார்.
