/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோடை வெயிலை சமாளிக்க சுகாதாரத்துறை 'டிப்ஸ்'
/
கோடை வெயிலை சமாளிக்க சுகாதாரத்துறை 'டிப்ஸ்'
ADDED : ஏப் 28, 2024 03:39 AM
கோடை வெயில், வழக்கத்தை விட அதிகரித்துள்ள நிலையில், அதிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள, புதுச்சேரி சுகாதாரத்துறை சில அறிவுறுத்தல்களை ெளியிட்டுள்ளது.
► மக்கள் அதிக தண்ணீர் பருக வேண்டும், மோர், எலுமிச்சை சாறு இவற்றுடன் சிறிது உப்பு கலந்து பருக வேண்டும், இளநீர் பருகலாம்.
► வாய்வழி ஓ.ஆர்.எஸ்., நீர்ச்சத்து கரைசலை நீரில் கரைத்து குடிக்க வேண்டும். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி ஒ.ஆர்.எஸ்., எடுத்துக் கொள்ள வேண்டும்.
► தளர்வான மெல்லிய பருத்தி ஆடைகளை உடுத்த வேண்டும். கம்பளி ஆடைகளை போர்த்தி கொள்வதை தவிர்க்க வேண்டும். வெயிலில் செல்லும் போது குடை, தொப்பி, குளிரூட்டும் கண் கண்ணாடி அணிந்து செல்வது நலம்.
► குழந்தைகளை வெயிலில் அழைத்து செல்லும்போது அதிக அளவில் தண்ணீர் குடிக்க வைக்க வேண்டும்.
► நாம் இருக்கும் இடத்தை காற்றோடமாக வைத்திருக்க வேண்டும். சூரிய வெளிச்சம் நேரடியாக படும் திசையில் ஜன்னல் அமைந்திருந்தால் அதை பகல் நேரத்தில் மூடி, இரவு நேரத்தில் மட்டும் திறந்து வைக்கலாம்.
► வெப்பம் அதிகமாக இருக்கும் பகல் 12:00 முதல் 3:00 வரையில், வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
► குழந்தைகள், மூத்த குடிமக்கள், கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரை கவனமாக பார்த்துக் கொள்வதுடன் அவர்களை வெயில் நேரத்தில் வெளியில் அழைத்து செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
► தலைச்சுற்றல், மயக்கம், குமட்டல், தலைவலி, வழக்கத்திற்கு மாறாக அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் கழித்தல், சுவாச பிரச்னை இருந்தால் மருத்துவர்களை அணுக வேண்டும்.
வெயில் பாதித்தவர்களுக்கு செய்ய வேண்டிய முதலுதவி
► வெயிலில் பாதிக்கப்பட்டவர்களை நிழல் மற்றும் காற்றோட்டமான இடத்தில் படுக்க வைக்க வேண்டும்.
► ஆடைகளை தளர்த்தி குளிர்ந்த நீரினை உடம்பில் ஒற்றி எடுக்க வேண்டும்.
► மின் விசிறியின் காற்று உடலில் படும்படி வைக்க வேண்டும். குளிர்சாதன அறை பயன்படுத்தி கொள்ளலாம்.
► பாதங்களை சற்று உயர்த்தி படுக்க வைக்க வேண்டும்.
மேற்கண்ட முறைகளில் பலன் ஏற்படாவிட்டால் அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்ல வேண்டும் அல்லது 108 ஆம்புலன்ஸை அழைக்கலாம்.
வெப்ப காலத்தில் ஏற்படும் நோய்களை சமாளிக்கவும் அவற்றுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் புதுச்சேரியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எனவே, புதுச்சேரி மக்கள் அதிக சூர்ய வெப்பத்தால் உருவாகும் அயர்ச்சி மற்றும் பக்கவாதத்தை தடுத்து பாதுகாப்பாக இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என, சுகாதாரத் துறை இயக்குனர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.

