புதுச்சேரி - திண்டிவனம் பைபாசில் விபத்துகளை தடுக்க ரூ.147 கோடியில் 7 இடங்களில் அமைகிறது மேம்பாலம்
புதுச்சேரி - திண்டிவனம் பைபாசில் விபத்துகளை தடுக்க ரூ.147 கோடியில் 7 இடங்களில் அமைகிறது மேம்பாலம்
ADDED : ஜூலை 04, 2026 09:01 PM

வானுார்: புதுச்சேரி - திண்டிவனம் புறவழிச்சாலையில், விபத்துகளை தடுக்கும் வகையில் 7 முக்கிய சந்திப்புகளில் 147 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கும் பணி துவங்கப்பட உள்ளது.
புதுச்சேரி - திண்டிவனம் புறவழிச்சாலை போக்குவரத்துக்கு முக்கியத்தும் வாய்ந்தது. இந்த சாலை வழியாக பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. கடந்த காலங்களில், சாலை குறுகலாக இருந்ததால் போக்குவரத்தை சமாளிக்க முடியாத நிலை இருந்தது.
இதையடுத்து, கடந்த 2007ம் ஆண்டு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், புதுச்சேரி - திண்டிவனம் இடையே நான்கு வழிச்சாலை அமைக்க ஒப்புதல் அளித்தது. கடந்த 2008ம் ஆண்டில், 38.620 கி.மீ., துாரத்திற்கு 273.6 கோடி ரூபாய் செலவில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி துவங்கியது.
தொடர்ந்து, 2012ம் ஆண்டில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு நான்கு வழிச்சாலை திறந்து விடப்பட்டது.
ஆனால், சரியான திட்டமிடல் இல்லாததால், முக்கிய சந்திப்புகளில் மேம்பாலங்கள் கட்டப்படவில்லை. இரும்பை, தைலாபுரம், ஒழிந்தியாம்பட்டு, கோவடி போன்ற மக்கள் சாலையை கடந்து செல்லும் முக்கிய சந்திப்புகளில் மேம்பாலம் கட்டப்படாமல் சாலை திறக்கப்பட்டது.
இந்த சந்திப்புகள் வழியாக, இப்பகுதி கிராமங்களை சேர்ந்த மக்கள், சாலையை கடந்து செல்கின்றனர். இந்த இடங்களில் மேம்பாலங்கள் இல்லாததால், விபத்துகள் அதிகளவில் நடந்து வருகிறது.
கீழ்கூத்தப்பாக்கம் - கிளியனுார் சாலை சந்திப்பில் தொடர் விபத்து ஏற்பட்டு, பொது மக்கள் போராட்டம் நடத்தியதன் விளைவாக அப்பகுதியில் 20 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் அமைக்கப்பட்டது. மற்ற இடங்களிலும் மேம்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், விபத்துகளை தடுக்கும் வகையில் 7 முக்கிய கிராம சந்திப்புகளில் மேம்பாலம் அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதற்காக 147 கோடி ரூபாய் மதிப்பீடு செய்து, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி இரும்பை கிராமம் சந்திப்பு, புள்ளிச்சப்பள்ளம் தானிய கிடங்கு எதிரில் (திருச்சிற்றம்பலம் வளைவு), ஒழிந்தியாம்பட்டு, தைலாபுரம், ஓமந்துார், கோவடி, எடையான்குளம் ஆகிய 7 இடங்களில் மேம்பாலங்களும், காட்ராம்பாக்கம், கேணிப்பட்டு ஆகிய இடங்களில் சிறிய வாகனங்கள் சாலையை கடக்கும் வகையில் இரண்டு சிறிய பாலங்களும் அமைக்கப்பட உள்ளது.
மேம்பாலங்கள் அமைக்கும் பணிகளை மதுரையை சேர்ந்த ஆர்.ஆர். என்ற தனியார் கன்ஸ்ட்ரக் ஷன் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
முதற்கட்டமாக 7 இடங்களிலும், வாகனங்கள் சாலையோரம் செல்லும் வகையில், சர்வீஸ் ரோடு அமைக்கும் பணிக்காக ஜே.சி.பி., இயந்திரங்கள் மூலம் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. அதையடுத்து, மேம்பாலம் அமைக்கும் பணிகள் விரைவில் துவங்கும். இந்த மேம்பாலங்கள் 2 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
