போதைப்பொருள் தடுப்பு ஒருங்கிணைந்த மைய அமைப்பின் மாநில அளவிலான கூட்டம்
போதைப்பொருள் தடுப்பு ஒருங்கிணைந்த மைய அமைப்பின் மாநில அளவிலான கூட்டம்
ADDED : ஜூலை 01, 2026 04:15 AM

புதுச்சேரி: புதுச்சேரி மாநில போதைப்பொருள் தடுப்பு ஒருங்கிணைந்த மைய அமைப்பின் 11வது மாநில அளவிலான உயர்மட்டக் குழுக் கூட்டம் வணிக வரித்துறை கருத்தரங்கு அறையில் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு, முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கினார்.
இதில், தலைமை செயலாளர் சரத் சவுகான், வளர்ச்சி ஆணையர் கிருஷ்ண மோகன் உப்பு, அரசு செயலர்கள் ஸ்மிதா, சவுதரி முகமது யாசின், முத்தம்மா, கலெக்டர் குலோத்துங்கன், டி.ஐ.ஜி. சத்தியசுந்தரம், சீனியர் எஸ்.பி., கலைவாணன், சென்னை மண்டல போதை தடுப்பு பிரிவு உதவி இயக்குநர் அரவிந்த், அரசு அதிகாரிகள், துறைத் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், போதைப்பொருள் தடுப்பு மற்றும் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
மாநிலத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க அடுத்த 3 ஆண்டுகாலத்திற்கான (2026- 29) போதைப்பொருள் எதிர்ப்பு செயல் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
கல்வி நிறுவனங்களை போதைப்பொருள் இல்லா வளாகங்களாக மாற்றுதல் மற்றும் பள்ளி, கல்லுாரிகளை சுற்றிலும் 500 மீட்டருக்கு போதைப்பொருள் இல்லாத மண்டலங்களாக அறிவித்து கண்காணிக்க வேண்டும்.
கிழக்கு கடற்கரை கடல்சார் எல்லைகளில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.
மாவட்ட அளவிலான போதைப்பொருள் ஒருங்கிணைந்த மைய அமைப்புகளின் செயல்பாடுகளை வலுப்படுத்த வேண்டும்.
போதைப் பொருள் கடத்தல் தொடர்பான குற்ற செயல்களின் ஈடுபடுவர்களின் சொத்துகள் மற்றும் நிதி பரிவர்த்தனை குறித்த விசாரணையை வலுப்படுத்த வேண்டும்.
போதைப்பொருள் தடுப்பில் தேசிய ஒருங்கிணைந்த போதைப்பொருள் குற்றவாளிகள் தகவல் தளம், சர்வதேச போலீஸ் ஒத்துழைப்பு மற்றும் பிற நவீன தொழில்நுட்ப தளங்களை முழுமையாக பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
