புனரமைக்கப்பட்ட பிரெஞ்சு கால கலங்கரை விளக்கம்: மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் திறந்து வைப்பு
புனரமைக்கப்பட்ட பிரெஞ்சு கால கலங்கரை விளக்கம்: மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் திறந்து வைப்பு
UPDATED : ஜூலை 01, 2026 09:40 PM
ADDED : ஜூலை 01, 2026 08:32 PM

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை சாலையில் பிரெஞ்சு ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட 190 ஆண்டுகள் பழமையான கலங்கரை விளக்கம் ரூ. 3.50 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்டு, நேற்று முதல் பொது மக்கள் பார்வைக்கு திறந்து விடப்பட்டது.
புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடல் எதிரே பிரெஞ்சு ஆட்சி காலத்தில் 1836ம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான கலங்கரை விளக்கம் உள்ளது. இது, வங்காள விரிகுடாவின் கோரமண்டல் கோஸ்ட் எனப்படும் சோழமண்டல கடற்கரையில், கப்பல்களுக்கு வழிகாட்டும் முதல் கலங்கரை விளக்கமாக இருந்துள்ளது. 190 ஆண்டுகள் பழமையான, 29 மீட்டர் உயரம் கொண்ட இந்த கலங்கரை விளக்கத்தில் முதலில் எண்ணெய் கொண்டு வெளிச்சம் உருவாக்கப்பட்டது.
பின் 1931ம் ஆண்டு, இது ஒளிகற்களை கொண்டு மின் மயமாக்கப்பட்டது. 1941ம் ஆண்டு முதல், இக்கட்டடம் சுங்க அலுவலகமாகவும், குடியிருப்புகளாகவும் செயல்பட்டு வந்தது. பின் 1979ம் ஆண்டு பாண்டி மெரினா பகுதியில், புதிய கலங்கரை விளக்கம் துவங்கிய பின், இது பயன்பாட்டில் இல்லை.
பின் இங்கு தொடர்ந்து சுங்க அலுவலகம் இயங்கி வந்தது. மத்திய கலால் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கட்டடம் கடந்த 2019ம் ஆண்டு, பழுது காரணமாக மூடப்பட்டது,
தொடர்ந்து ரூ. 3.50 கோடி மதிப்பில் புனரமைப்பு பணிகள் நடந்து புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. இந்த கலங்கரை விளக்க கட்டடத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் திறந்து வைத்தார். தொடர்ந்து கலங்கரை விளக்கம் மக்கள் பார்வைக்காக நேற்று முதல் திறந்து வைக்கப்பட்டது.
சுற்றுலா பயணிகள் கலங்கரை உச்சிக்கு சென்று புதுச்சேரி கடற்கரை மற்றும் நகரின் அழகினையும் கழுகு பார்வையில், பார்த்து ரசித்தனர். மேலும் கலங்கரை விளக்கத்தின் வரலாற்று தகவல்கள் அடங்கிய அருங்காட்சியகத்தையும் கண்டுகளித்தனர். கலங்கரை விளக்கத்திற்குள் சுற்றிபார்க்க கட்டணமாக 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
தினமும் காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை பார்வையிடலாம். மதியம் 1 முதல் 2 மணி வரை உணவு இடைவேளை. திங்கட்கிழமை மற்றும் அரசுமுறை விடுமுறை நாட்களில், பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என மத்திய கலால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
