/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
வெற்றி தீபம் ஏற்றிய பாண்ட்யா... * கட்டாக்கில் இந்தியா கலக்கல்
/
வெற்றி தீபம் ஏற்றிய பாண்ட்யா... * கட்டாக்கில் இந்தியா கலக்கல்
வெற்றி தீபம் ஏற்றிய பாண்ட்யா... * கட்டாக்கில் இந்தியா கலக்கல்
வெற்றி தீபம் ஏற்றிய பாண்ட்யா... * கட்டாக்கில் இந்தியா கலக்கல்
ADDED : டிச 09, 2025 11:32 PM

கட்டாக்: கட்டாக் 'டி-20' போட்டியில் ஹர்திக் பாண்ட்யா 25 பந்தில் அரைசதம் விளாச, இந்திய அணி 101 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நேற்று ஒடிசாவின் கட்டாக்கில் உள்ள பாராபதி மைதானத்தில் நடந்தது. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் மார்க்ரம், 'பவுலிங்' தேர்வு செய்தார்.
இந்திய அணி துவக்கத்தில் நிகிடி 'வேகத்தில்' அதிர்ந்தது. முதல் ஓவரில் சுப்மன் கில்லை (4) வெளியேற்றினார். இவரது அடுத்த ஓவரில் கேப்டன் சூர்யகுமார் வரிசையாக ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்தார். இன்னொரு சிக்சருக்கு ஆசைப்பட்ட சூர்யகுமார் (12) வீணாக விக்கெட்டை பறிகொடுத்தார். இந்தியா 2.4 ஓவரில் 17/2 ரன் எடுத்து தவித்தது.
அபிஷேக் பதிலடி
பின் யான்சென் வீசிய பந்து அபிஷேக் சர்மாவின் இடுப்பு பகுதியை தாக்க, வலியுடன் கீழே விழுந்தார். விரைவில் மீண்ட இவர், அடுத்த பந்தை சிக்சருக்கு அனுப்பி பதிலடி கொடுத்தார். சிபம்லா ஓவரின் முதலிரண்டு பந்துகளை பவுண்டரிக்கு விரட்டிய அபிஷேக், 3வது பந்தை அவசரப்பட்டு துாக்கி அடித்தார். எல்லையில் யான்சென் கலக்கலாக பிடிக்க, 17 ரன்னுக்கு நடையை கட்டினார். இந்தியா 6.3 ஓவரில் 48/3 ரன் எடுத்து தத்தளித்தது. இந்த சமயத்தில் நோர்க்கியா பந்தில் இமாலய சிக்சர் விளாசிய திலக் வர்மா நம்பிக்கை தந்தார். இவர், 26 ரன் எடுத்தார்.
25 பந்தில் அரைசதம்
'டாப்-ஆர்டர்' பேட்டர்கள் ஏமாற்றிய நிலையில், 6வது இடத்தில் களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா கைகொடுத்தார். தொடை பகுதி காயத்தில் இருந்து மீண்ட இவர், 74 நாளுக்கு பின் களமிறங்கினார். அதிரடியாக ஆடிய இவர், ஆட்டத்தின் போக்கை மாற்றினார். மஹாராஜ் ஓவரில் 2 சிக்சர் பறக்கவிட்டார். மறுபக்கம் சிபம்லா பந்தை சிக்சருக்கு அனுப்பிய அக்சர் படேல் (23), அடுத்த பந்தில் அவுட்டானார். 14 ஓவரில் இந்தியா 104/5 ரன் எடுத்திருந்தது. நோர்க்கியா ஓவரில் (15வது) பாண்ட்யா அடித்த 2 பவுண்டரி, 5 'வைடு' சேர்த்து மொத்தம் 17 ரன் கிடைக்க, இந்திய ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். டோனவன் பெரேரா 'சுழலில்' ஷிவம் துபே (11) போல்டானார். தனிநபராக போராடிய பாண்ட்யா, சிபம்லா ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தார். ஜிதேஷ் சர்மாவும் ஒரு சிக்சர் விளாச, மொத்தம் 18 ரன் கிடைத்தன. தொடர்ந்து நோர்க்கியா பந்தை சிக்சருக்கு அனுப்பிய பாண்ட்யா, 25 பந்தில் அரைசதம் கடந்தார். இது சர்வதேச 'டி-20' அரங்கில் இவரது 6வது அரைசதம். கடைசி 6 ஓவரில் 71 ரன் எடுக்கப்பட்டன. இந்திய அணி 20 ஓவரில் 175/6 ரன் எடுத்தது. பாண்ட்யா (59, 6x4, 4x6), ஜிதேஷ் சர்மா (10) அவுட்டாகாமல் இருந்தனர்.
விக்கெட் சரிவு
சவாலான இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணி, இந்திய அணியின் அபார பந்துவீச்சில் சிதறியது. அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரின் 2வது பந்தில் குயின்டன் டி காக் (0) அவுட்டானார். தொடர்ந்து அர்ஷ்தீப் 'வேகத்தில்' ஸ்டப்ஸ் (14) வெளியேறினார். அக்சர் படேல் 'சுழலில்' கேப்டன் மார்க்ரம் (14) சிக்கினார். பாண்ட்யா பந்தில் 'ஆபத்தான' டேவிட் மில்லர்(1) அவுட்டாக, இந்தியாவின் வெற்றி தீபம் பிரகாசமானது. வருண் சக்ரவர்த்தி வலையில் பெரேரா (5), யான்சென் (14) 'பெவிலியன்' திரும்பினர். பும்ரா 'வேகத்தில்' பிரவிஸ் (22) வெளியேறினார். 'டெயிலெண்டர்கள்' நிலைக்கவில்லை. தென் ஆப்ரிக்க அணி 12.3 ஓவரில் 74 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது.
இரண்டாவது 'டி-20' போட்டி, டிச. 11ல் சண்டிகரில் நடக்க உள்ளது.
100 'சிக்சர்'
சர்வதேச 'டி-20' அரங்கில் 100 சிக்சர் விளாசிய 4வது இந்திய வீரரானார் ஹர்திக் பாண்ட்யா. முதல் மூன்று இடங்களில் ரோகித் சர்மா (205), சூர்யகுமார் யாதவ் (155), கோலி (124) உள்ளனர்.
2வது அதிகம்
இந்தியா சார்பில் நேற்று பெரியளவில் 'பார்ட்னர்ஷிப்' அமைத்து விளையாடவில்லை. அதிகபட்சமாக 7வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்ட்யா-ஜிதேஷ் சர்மா 38 ரன் சேர்த்தனர். சர்வதேச 'டி-20' அரங்கில் 40 ரன் 'பார்ட்னர்ஷிப்' அமைக்காமல் அதிக ஸ்கோர் எடுத்த அணிகள் (ஐ.சி.சி., முழு உறுப்பு நாடுகள்) பட்டியலில் இந்தியா (175/6, எதிர், தெ.ஆ., கட்டாக், 2025) 2வது இடம் பிடித்தது. முதலிடத்தில் நியூசிலாந்து (176/8, எதிர், இங்கி., வெலிங்டன், 2019) உள்ளது.
74 ரன்
சர்வதேச 'டி-20' ல் தனது குறைந்த ஸ்கோரை பதிவு செய்தது தென் ஆப்ரிக்கா. நேற்று 74 ரன்னில் சுருண்டது.
* 'டி-20'ல் 6வது முறையாக 100க்கும் குறைவான ஸ்கோரில் ஆல் அவுட்டானது தென் ஆப்ரிக்கா.
* இந்தியாவுக்கு எதிராக 3வது முறை இதுபோல (2020ல் 89, 2022ல் 87, 2025ல் 74) சுருண்டது தென் ஆப்ரிக்கா.
நழுவியதா 'நோ பால்'
நேற்று பும்ரா பந்தில் பிரவிஸ் அவுட்டாகி திரும்பினார். 'ரீப்ளேயில்' பும்ரா கால், கிரீசிற்கு வெளியே இருப்பது போலத் தெரிந்தது. இருப்பினும் மூன்றாவது அம்பயர் தீர்ப்பு, பும்ராவுக்கு சாதகமாக கிடைத்தது.
பும்ரா '100'
நேற்று பிரவிசை அவுட்டாக்கிய பும்ரா, சர்வதேச 'டி-20'ல் 100 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டினார். தவிர, டெஸ்ட் (52ல் 234), ஒருநாள் (89ல் 149), 'டி-20' (81ல் 101) என மூன்று வித கிரிக்கெட்டில் 100 விக்கெட் என்ற இலக்கை அடைந்த முதல் இந்திய பவுலர் என சாதனை படைத்தார்.

