/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
விளையாட்டுக்கு முதல் மரியாதை: பாய்ச்சங் பூட்டியா விருப்பம்
/
விளையாட்டுக்கு முதல் மரியாதை: பாய்ச்சங் பூட்டியா விருப்பம்
விளையாட்டுக்கு முதல் மரியாதை: பாய்ச்சங் பூட்டியா விருப்பம்
விளையாட்டுக்கு முதல் மரியாதை: பாய்ச்சங் பூட்டியா விருப்பம்
ADDED : ஜன 11, 2025 10:41 PM

புதுடில்லி: ''ஒவ்வொரு குழந்தையும் டாக்டர் அல்லது இன்ஜீனியருக்கு படிக்க வேண்டுமென விரும்புகின்றனர். இந்த மனநிலை மாற வேண்டும். விளையாட்டுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்,'' என பாய்ச்சங் பூட்டியா தெரிவித்தார்.
டில்லியில் தேசிய இளைஞர் திருவிழாவான 'விக்சித் பாரத்' நடக்கிறது. நாடு முழுவதும் இருந்து 3000 இளைஞர்கள் பங்கேற்று, இந்தியாவின் எதிர்காலம் பற்றி பல்வேறு தலைப்புகளில் விவாதிக்கின்றனர். பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் வாயிலாக திறமை வெளிப்படுத்துகின்றனர்.
மோடிக்கு பாராட்டு: இதில் கலந்து கொண்ட இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பாய்ச்சங் பூட்டியா பேசியது: தேசிய இளைஞர் விழாவை நடத்தும் பிரதமர் மோடியின் முயற்சிக்கு பாராட்டுகள். சர்வதேச விளையாட்டு அரங்கில் இந்தியாவை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்வதற்கான திட்டங்களை இளைஞர்கள் தெரிவித்தனர்.
இந்தியாவை 'விளையாட்டு தேசமாக' மாற்றுவது பற்றி விவாதித்தோம்.
என்னை பொறுத்தவரை, இந்தியாவின் கல்விக் கொள்கையில் மாற்றம் செய்ய வேண்டும். தற்போது படிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். விளையாட்டை கண்டுகொள்வதில்லை. ஒவ்வொரு குழந்தையும் டாக்டர் அல்லது இன்ஜீனியருக்கு படிக்க வேண்டுமென விரும்புகின்றனர். இந்த மனநிலை மாற வேண்டும். 'முதலில் விளையாட்டு' என்ற சூழல் உருவாக வேண்டும்.
முக்கிய பாடம்: மத்திய கல்வி, விளையாட்டுத் துறை அமைச்சர்கள் கலந்து பேசி உரிய முடிவு எடுக்க வேண்டும். மாணவர்கள், விளையாட்டுக்கென போதிய நேரம் ஒதுக்க முடிவதில்லை. விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 'விளையாட்டு பள்ளிகளை' நாடு முழுவதும் திறக்கலாம்.
பாடத்திட்டத்தில் முக்கிய பாடமாக விளையாட்டை இடம் பெறச் செய்வது அவசியம். விளையாட்டுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் கல்விக் கொள்கை அமைந்தால் தான், இந்தியாவில் இருந்து நிறைய உலக சாம்பியன்களை உருவாக்க முடியும்.
இவ்வாறு பூட்டியா கூறினார்.

