/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
கால்பந்து: இளம் இந்தியா அசத்தல் * ஈரானை சாய்த்து ஆசிய கோப்பைக்கு தகுதி
/
கால்பந்து: இளம் இந்தியா அசத்தல் * ஈரானை சாய்த்து ஆசிய கோப்பைக்கு தகுதி
கால்பந்து: இளம் இந்தியா அசத்தல் * ஈரானை சாய்த்து ஆசிய கோப்பைக்கு தகுதி
கால்பந்து: இளம் இந்தியா அசத்தல் * ஈரானை சாய்த்து ஆசிய கோப்பைக்கு தகுதி
ADDED : டிச 01, 2025 11:21 PM

ஆமதாபாத்: ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு இளம் இந்திய அணி தகுதி பெற்றது. வலிமையான ஈரானை சாய்த்தது.
ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில், 17 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை தொடர், வரும் 2026, மே 7-24ல் சவுதி அரேபியாவில் நடக்க உள்ளது. இதற்கான தகுதிச்சுற்றில் 38 அணிகள் பங்கேற்றன.
இந்திய அணி 'டி' பிரிவில் பாலஸ்தீனம், ஈரான், லெபனான், சீன தைபேவுடன் இடம் பெற்றது. பட்டியலில் முதலிடம் பிடித்தால் ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெறமுடியும்.
இந்திய அணி, முதல் போட்டியில் பாலஸ்தீனத்துடன் (1-1) 'டிரா' செய்தது. அடுத்து சீன தைபேவை (3-1) வென்ற இந்தியா, லெபனானிடம் (0-2) தோற்றது.
இந்நிலையில் இந்திய அணி (4 புள்ளி) சொந்தமண்ணில் நடந்த (ஆமதாபாத்) கடைசி போட்டியில், பட்டியலில் முதலிடத்தில் இருந்த வலிமையான ஈரானை (7 புள்ளி) சந்தித்தது. இதில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா விளையாடியது.
19 வது நிமிடம் ஈரான் வீரர் ஆமிர்ரேசா ஒரு கோல் அடித்தார். முதல் பாதியின் ஸ்டாப்பேஜ் நேரத்தில் இந்திய அணிக்கு 'பெனால்டி' வாய்ப்பு கிடைத்தது. இதை காங்டே கோலாக மாற்ற, 1-1 என ஆனது.
இரண்டாவது பாதியில் 52 வது நிமிடம் இந்திய வீரர் கன்லெய்பா ஒரு கோல் அடித்தார். இதற்கு பதிலடி தர முயன்ற ஈரான் வீரர்கள் போராடினர். இந்திய கோல் கீப்பர் சர்கார் சிறப்பாக செயல்பட, கடைசி வரை ஈரானுக்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் 'திரில்' வெற்றி பெற்றது.
தகுதி எப்படி
முடிவில் 'டி' பிரிவில் இந்தியா, ஈரான் அணிகள் தலா 7 புள்ளி பெற்றன. கோல் அடிப்படையில் இந்தியாவை (+1) விட ஈரான் முன்னிலை (+6) பெற்றது. ஆனால் போட்டி விதிப்படி, ஈரானை வீழ்த்தியதன் அடிப்படையில் இந்தியாவுக்கு முதலிடம் கிடைத்தது. ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது.
நான்காவது அணி
வரும் 2026ல் ஆண்டு நடக்கவுள்ள சீனியர் பிரிவு (2026, ஆஸி.,), 20 வயதுக்கு உட்பட்ட (2026, தாய்லாந்து), 17 வயதுக்கு உட்பட (2026, சீனா) என மூன்று வித ஆசிய கோப்பை தொடருக்கும் இந்திய பெண்கள் அணிகள் தகுதி பெற்றன. தற்போது நான்காவது அணியாக, இளம் இந்தியா (17 வயது, ஆண்கள்) தகுதி பெற்றுள்ளது.
10வது முறை
இளம் இந்திய அணி (17 வயது), கடந்த 1990ல் முதன் முறையாக ஆசிய கோப்பை கால்பந்தில் பங்கேற்றது. தற்போது 10வது முறையாக இத்தொடருக்கு தகுதி பெற்றுள்ளது. இதில் 2002, 2018ல் காலிறுதிக்கு முன்னேறியது தான் அதிகபட்ச செயல்பாடாக உள்ளது.
66 ஆண்டுக்குப் பின்...
கால்பந்து அரங்கில் 17 வயதுக்கு உட்பட்ட அணிகள் பிரிவில் இந்திய அணி, கடந்த 66 ஆண்டில் முதன் முறையாக ஈரானை வீழ்த்தியது.

