ADDED : ஜூலை 06, 2026 11:43 PM

மயாமி: அமெரிக்க மக்களின் சிறப்பான உபசரிப்பு 'உலக' ரசிகர்களை கவர்ந்துள்ளது. சகஜமாக பழகிய இவர்கள், தங்களது படகில் இலவசமாக அழைத்துச் சென்று ஊர் சுற்றி காண்பித்தது, தரமான உணவு வழங்கியது, உற்சாகமாக நடனமாடியது, ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
உலக கோப்பை தொடரின் பெரும்பாலான போட்டிகள் அமெரிக்காவில் நடக்கின்றன. இங்கு நிலவும் பாதுகாப்பு கெடுபிடிகள், விலைவாசி உயர்வு, ஈரான் போரால் அரசியல் பதட்டம் போன்றவை ரசிகர்களை கலக்கம் அடையச் செய்தது. இருப்பினும் கால்பந்து மோகத்தால், பல நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான ரசிகர்கள், அமெரிக்க மண்ணில் கால் பதித்தனர்.
அமெரிக்க மக்களை நேருக்கு நேர் சந்தித்த பிறகு, ரசிகர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டது. இங்குள்ளவர்கள் அன்பானவர்களாக இருந்தனர். ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் ரசிகர்களுக்கு உதவ முன்வந்தனர். அவர்கள் விரும்பிய இடங்களுக்கு தங்களது சொந்த செலவில் அழைத்துச் சென்றனர்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த 'இன்ஸ்டா' பிரபலம் டேன் மெக்னமாரா கூறுகையில்,''அமெரிக்க மக்கள் விருந்தோம்பலுக்கு பெயர் பெற்றவர்கள் என கேள்விப்பட்டிருக்கிறேன். நேரில் அனுபவிக்கும் வாய்ப்பு, உலக கோப்பை தொடரில் கிடைத்தது. மியாமியில் அறிமுகம் இல்லாத ஒருவர், என்னை படகில் அழைத்துச் சென்றார். தனிப்பட்ட முறையில் ஊர் சுற்றி காண்பித்தார். படகில் காலை உணவு வழங்கினார். இத்தகைய சம்பவம் வேறு நாடுகளில் நடக்க வாய்ப்பு இல்லை,'' என்றார். தனது படகு பயண 'வீடியாவை'யும் வெளியிட்டுள்ளார்.
சுற்றுலா சொர்க்கம்: உலக ரசிகர்களை வரவேற்று, அமெரிக்காவின் டிரூ ஹாஸ் வெளியிட்ட செய்தியில்,'வெளிநாட்டு விருந்தினர்களுடன் சேர்ந்து டெக்சாஸ் அழகை ரசிக்க ஆர்வமாக உள்ளேன். நீங்கள் டெக்சாசில் இருந்தால், எனக்கு 'மெசேஜ்' அனுப்புங்கள். டெக்சாஸ் நகரம், கால்நடை வளர்ப்பு இடம், கிராம பகுதிகள் என அனைத்து இடங்களையும் எனது ஜீப்பில் சுற்றி காண்பிக்கிறேன்,' என 'வீடியோ' வெளியிட்டார். இவரை போன்றவர்களால் தான் 'சுற்றுலா பிரியர்களின் சொர்க்கமாக' அமெரிக்க திகழ்கிறது என பலரும் பாராட்டினர்.
பொதுவாக போட்டிகள் முடிந்த பின் பகை மறந்து ரசிகர்கள் ஒன்று சேர்ந்து நடனமாடுவர். சியாட்டிலில் இரவு 9 மணிக்கு மேல் வெற்றியை கொண்டாடிய ரசிகர்களுடன் அமெரிக்க மக்களும் சேர்ந்து கொண்டனர். அறிமுகம் இல்லாத நபருக்கு கூட தங்களது காரில் இடம் அளித்தனர்.
கால்பந்து ரசிகர் ஸ்டீபன் ஸ்காட் கூறுகையில்,''அமெரிக்க மக்களின் உபசரிப்பை என்றும் மறக்க மாட்டோம். உலகின் அழகான கால்பந்து விளையாட்டு அனைவரையும் ஒன்றிணைக்கிறது. உலக கோப்பை தொடர் முடிந்தாலும், அமெரிக்க மண்ணை விட்டுச் செல்ல எங்களது மனம் மறுக்கும்,'' என நெகிழ்ச்சியான 'வீடியோ' வெளியிட்டுள்ளார்.
