தாம்பரத்தில் வரிசையாக இரும்பு தடுப்பு நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் தவிப்பு
தாம்பரத்தில் வரிசையாக இரும்பு தடுப்பு நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் தவிப்பு
ADDED : ஆக 05, 2026 07:53 PM

தாம்பரம்: கிழக்கு தாம்பரத்தில் இரும்பு தடுப்புகளை வைத்து சாலையை சுருக்கியதால், ‘பீக் ஹவர்ஸ்’ நேரங்களில் கடும் நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.
கிழக்கு தாம்பரத்தில் இருந்து வேளச்சேரிக்கு செல்லும் மேஜர் முகுந்த் வரதராஜன் சாலையில், காவல் உதவி மையம் அமைத்து, நாள்தோறும் வாகன சோதனை நடத்தப்படுகிறது. அப்போது, சாலையில் வரிசையாக இரும்பு தடுப்புகளை வைத்து, சாலையை சுருக்கி, வாகனங்களை மடக்கி சோதனை செய்வர்.
ஆனால், ‘பீக் ஹவர்ஸ்’ நேரங்களில் நெரிசலை கருத்தில் கொண்டு, இரும்பு தடுப்புகளை அகற்றிவிடுவர். நேற்று வரிசையாக இரும்பு தடுப்புகளை வைத்து, வாகன சோதனை நடத்திய போக்குவரத்து போலீசார், அவற்றை அகற்றாமல் விட்டு விட்டனர். இதனால், நேற்று மாலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கிழக்கு தாம்பரத்தில் இருந்து வேகமாக சென்ற வாகன ஓட்டிகள், திடீரென இரும்பு தடுப்புகளை பார்த்ததும் திக்குமுக்காடி, பிரேக் போட்டு நின்றனர். அதிர்ஷ்டவசமாக விபத்து எதுவும் ஏற்படவில்லை.
நெரிசலை கட்டுப்படுத்த வேண்டிய போலீசாரே, இரும்பு தடுப்புகளை வைத்து, நெரிசல் ஏற்படுவதற்கு காரணமாக இருப்பது, வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
