/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
4 துப்பாக்கிகளுடன் பதுங்கி இருந்த 18 ரவுடிகள் கைது 86 தோட்டாக்கள், ஆயுதங்கள் பறிமுதல்
/
4 துப்பாக்கிகளுடன் பதுங்கி இருந்த 18 ரவுடிகள் கைது 86 தோட்டாக்கள், ஆயுதங்கள் பறிமுதல்
4 துப்பாக்கிகளுடன் பதுங்கி இருந்த 18 ரவுடிகள் கைது 86 தோட்டாக்கள், ஆயுதங்கள் பறிமுதல்
4 துப்பாக்கிகளுடன் பதுங்கி இருந்த 18 ரவுடிகள் கைது 86 தோட்டாக்கள், ஆயுதங்கள் பறிமுதல்
ADDED : மார் 14, 2024 11:09 PM
சென்னை:சென்னையில் எதிரிகளை தீர்த்துக்கட்ட, துப்பாக்கிகளுடன் சொகுசு கார்களில் பறந்த, 17 ரவுடிகளை போலீசார் கூண்டோடு கைது செய்துள்ளனர்.
சென்னை, திருமங்கலத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில், ரவுடிகள் தங்கி உள்ளனர். இவர்களிடம் பயங்கரமான ஆயுதங்கள் இருப்பதாக, அதிதீவிர குற்றத்தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, திருமங்கலம் போலீசாருடன் நேற்று முன்தினம் இரவு, அந்த ஹோட்டலை, துப்பாக்கி முனையில் போலீசார் சுற்றி வளைத்தனர்.
அப்போது, ரவுடிகள் தப்பிக்க முயன்றனர். ஒரு அடி எடுத்து வைத்தாலும் சுட்டுத் தள்ளிவிடுவோம் என, போலீசார் தெரிவித்தனர்.
ஹோட்டலில் பதுங்கியிருந்த, அரக்கோணத்தைச் சேர்ந்த 'ஒற்றைக்கண்' ஜெயபால், 64, வேளச்சேரி பிரசன்னா, 30, உட்பட, 17 ரவுடிகளை கூண்டோடு கைது செய்தனர். இவர்களிடம் இருந்து, 2 துப்பாக்கிகள், 14 தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.
இவர்களை, பெரவள்ளூர், எழும்பூர் என, பல இடங்களுக்கு அழைத்துச் சென்று, போலீசார் விசாரித்தனர்.
இதில், 'ஒற்றைக்கண்' ஜெயபால், 2023, ஆக., மாதம் பட்டினப்பாக்கத்தில் ரவுடி ஆற்காடு சுரேஷ் என்பவரை தீர்த்துக்கட்டிய வழக்கில் சிறை சென்று, சமீபத்தில் ஜாமினில் வெளிவந்தது தெரியவந்தது. இவரது தலைமையில், எதிரிகளின் உயிருக்கு குறி வைத்து சதித்திட்டம் தீட்டி வந்ததும் தெரியவந்தது.
துப்பாக்கிகள் எப்படி கிடைத்தது என்பது குறித்து கேட்டபோது, துாத்துக்குடியைச் சேர்ந்த ரவுடி தம்புராஜ், 54, என்பவரிடம் இருந்து வாங்கியதாக, அவர்கள் தெரிவித்தனர். சென்னையில் பதுங்கி இருந்த தம்புராஜையும், போலீசார் கைது செய்தனர்.
துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் மீது, ஐந்து கொலைகள் உட்பட, 25க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
வெடிகுண்டுகள் தயாரிப்பு, துப்பாக்கிகளை கையாளுவதில் தம்புராஜ் கை தேர்ந்தவர். இவரிடம் இருந்து, மேலும் இரண்டு துப்பாக்கிகள் மற்றும், 72 தோட்டாக்களை பறிமுதல் செய்துள்ளனர்.
கைதான ரவுடிகள், கொடுங்குற்றங்களில் ஈடுபடும், 'ஏ மற்றும் ஏ பிளஸ்' ரவுடிகள். இவர்களில் கல்லுாரி மாணவர்களும் இருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்க உள்ள நிலையில், சென்னையில் பயங்கர ஆயுதங்களுடன் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் அளித்த தகவலின்படி, மேலும் ஐந்து ரவுடிகள் சிக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

