ஏரி காத்த கோதண்டராமர் கோவிலில் ஆனி மாத பிரம்மோத்சவ திருவிழா
ஏரி காத்த கோதண்டராமர் கோவிலில் ஆனி மாத பிரம்மோத்சவ திருவிழா
UPDATED : ஜூலை 02, 2026 05:30 AM
ADDED : ஜூலை 01, 2026 10:02 PM

மதுராந்தகம்:மதுராந்தகத்தில் உள்ள ஏரி காத்த கோதண்டராமர் கோவிலில், ஆனி மாத பிரம்மோத்சவத்தை முன்னிட்டு தேர் திருவிழா கோலாகலமாக நடந்தது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வைணவத் திருத்தலங்களில் ஒன்றான ஏரி காத்த ராமர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 23ம் தேதி ஆனி மாத பிரம்மோத்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பிரம்மோற்சவ விழாவில் காலை, மாலை என இரு வேலைகளிலும், பல்வேறு வாகனங்களில் கருணாகர பெருமாள் ஸ்ரீதேவி - பூதேவியுடன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இதையொட்டி 3வது நாளன்று கருட சேவை, 5-ம் நாள் நாச்சியார் திருக்கோலம், 7வது நாள் வெள்ளித் தேரில் ராமபிரான் வீதி உலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக, தேர்திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது.
கருணாகர பெருமாள், தேவி பூதேவியுடன் தேரில் எழுந்தருளினர். பின் பக்தர்களின் ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஜெய் ஸ்ரீராம், கோவிந்தா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இதில், ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், நகராட்சி நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குழுவினர், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்காணோர் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர்.
