/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பழங்கற்கால மனிதர்களின் கற்கருவிகள் கண்டெடுப்பு
/
பழங்கற்கால மனிதர்களின் கற்கருவிகள் கண்டெடுப்பு
ADDED : டிச 09, 2025 06:58 AM

மாமல்லபுரம்:செங்கல்பட்டு பகுதிகளில், பழங்கற்கால மனிதர்கள் வாழ்ந்த அடையாளமாக, பாலாற்று பகுதிகளில் கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞர் அண்ணா கலை, அறிவியல் கல்லுாரி, வரலாற்றுத் துறை விரிவுரையாளர் மதுரை வீரன்.
இவர், செங்கல்பட்டு மாவட்ட பாலாற்றில் மேற்புற கள ஆய்வை, பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார். ஆற்றுப்படுகையில் பல்லவர், சோழர் உள்ளிட்டோர் கால நாணயங்களை கண்டெடுத்தார்.
தற்போது, செங்கல்பட்டு மலைக்குன்று பகுதியில், பழங்கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளமாக, அவர்கள் பயன்படுத்திய கற்கருவிகளை, ஆற்றுப்படுகையில் கண்டெடுத்துள்ளார்.
இதுகுறித்து, மதுரை வீரன் கூறியதாவது:
சென்னை பல்லாவரம் பகுதியில், 'செர்ட்' வகை கல்லில் செய்யப்பட்ட பழங்கற்கால கற்கருவிகளை, தொல்லியல் அறிஞர் ராபர்ட் புரூஸ் புரூட் என்பவர், 1863ல் கண்டெடுத்தார். அதன் மூலம், புதிய கற்காலத்திற்கு முந்தைய, பழங்கற்கால மனிதர்கள் அங்கு வாழ்ந்தது உறுதியானது.
இக்கருவிகள், 1.5 லட்சம் மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையதாக கருதப்படுகின்ன. அக்கால மனிதர்கள், 'ஹீமோ ஹெபிலிஸ், ஹீமோ ஹெரெக்டஸ்' என அழைக்கப்படுகின்றனர்.
பழங்கற்கால மனிதர்கள் பயன்படுத்திய உடைப்பான், கிழிப்பான், சுரண்டும் கருவி, கைக்கோடரி ஆகிய கற்கருவிகள், செங்கல்பட்டு அருகில் உள்ள ஈசூர், அரசர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில், பாலாற்றில் கிடைத்துள்ளன.
அக்கால மனிதர்கள், செங்கல்பட்டு மலைக்குன்றுகள், சுற்றுப்புற பகுதிகளைச் சார்ந்து வாழ்ந்திருக்கலாம். புதிய கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கற்கருவிகள் உள்ளிட்டவற்றையும், ஏற்கனவே கண்டெடுத்துள்ளேன்.
இவ்வாறு, அவர் கூறினார்.

