/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நெல் விற்ற தொகை ரூ.47.50 கோடி நிலுவையால்... அதிருப்தி:செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் தவிப்பு
/
நெல் விற்ற தொகை ரூ.47.50 கோடி நிலுவையால்... அதிருப்தி:செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் தவிப்பு
நெல் விற்ற தொகை ரூ.47.50 கோடி நிலுவையால்... அதிருப்தி:செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் தவிப்பு
நெல் விற்ற தொகை ரூ.47.50 கோடி நிலுவையால்... அதிருப்தி:செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் தவிப்பு
ADDED : டிச 07, 2025 06:03 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், மத்திய அரசின் தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையம் வாயிலாக, விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதில், 47.50 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளதால், விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், 1.60 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் உள்ளன.
இதில் மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம் ஆகிய தாலுகாக்களில், அதிக அளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக மதுராந்தகம், செய்யூர் ஆகிய பகுதிகளில், பாலாறு அருகிலுள்ள கிராமங்களில், இருபோகம் நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
தற்போது சம்பா பருவத்தில் மாவட்டத்தில், 31,000 ஏக்கர் விவசாய நிலங்களில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சாகுபடி செய்யப்பட்ட நெல்லை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் மத்திய அரசின் தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையம் நடத்திய, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் விற்பனை செய்தனர்.
விற்பனை
அந்த வகையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் நடத்திய 72 நெல் கொள்முதல் நிலையங்களில், 10,207 விவசாயிகள் 80,129 டன் நெல் விற்பனை செய்தனர். இதற்கான தொகையான 203.60 கோடி ரூபாய், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
திருக்கழுக்குன்றம் வட்டாரத்தில் மோசிவாக்கம், காட்டாங்கொளத்துார் வட்டாரத்தில் சாஸ்திரம்பாக்கம், திருவடிசூலம், அச்சிறுபாக்கம் வட்டாரத்தில் ஆனைக்குன்னம், தண்டரைபுதுச்சேரி ஆகிய பகுதிகளில், மத்திய அரசின் தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையம் வாயிலாக, கடந்த செப்டம்பர் மாதம் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
இந்த கொள்முதல் நிலையத்தில், 600 விவசாயிகள், 19,000 டன் நெல் விற்பனை செய்தனர்.
இதற்கான தொகையான 47.50 கோடி ரூபாயை, சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு, மத்திய அரசின் தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையம் வழங்க வேண்டும்.
ஆனால், மூன்று மாதங்களுக்கு மேலாகியும், இன்னும் அதற்கான பணத்தை, விவசாயிகளுக்கு வழங்கவில்லை. இதனால், விவசாயிகள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.
சிரமம்
விவசாய பணிகளுக்காக பணம் கடன் பெற்றும், தங்களது நகைகளை அடகு வைத்தும், விவசாயிகள் பலர் நெல் பயிர் சாகுபடி செய்துள்ளனர். தற்போது நெல் விற்பனை செய்த தொகையை தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையம் விடுவிக்காததால், விவசாயிகள் தாங்கள் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
குடும்ப செலவு, தங்கள் குழந்தைகளின் கல்விச் செலவிற்கு, மீண்டும் கடன் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
அத்துடன் தற்போது அறுவடை முடிந்த நிலையில், அடுத்த போக பயிர் சாகுபடிக்குத் தேவையான பணம் இல்லாமல், இப்பகுதி கிராம மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பணத்தை, வட்டியுடன் வழங்க வேண்டும்.
தேசிய கூட்டுறவு இணையத்திடம் இருந்து இந்த நிலுவைத் தொகையை பெற்றுத் தருவதற்கு, மாவட்ட கலெக்டர் மற்றும் தமிழக நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில், கடன் வாங்கி விவசாயம் செய்து வருகிறோம். தனியார் வியாபாரிகளிடம் நெல் விற்றால் குறைந்த விலை கிடைக்கும் என்பதால், அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்கிறோம். ஆனால், இங்கு பணம் கிடைக்க தாமதம் ஏற்படுவதால், வாங்கிய கடனுக்கு கூடுதல் வட்டி செலுத்த வேண்டியுள்ளது. இதனால், பலர் மேலும் கடனாளியாக மாறும் அவலம் தொடர்கிறது. தற்போது, நிலுவை வைத்துள்ள தொகையான 47.50 கோடி ரூபாயை, சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு, மத்திய அரசின் தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையம் வழங்க வேண்டும். - பி.வாசு, விவசாயி.

