/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தனியார் நிறுவனத்திற்கு இலவச மின் இணைப்பு குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு
/
தனியார் நிறுவனத்திற்கு இலவச மின் இணைப்பு குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு
தனியார் நிறுவனத்திற்கு இலவச மின் இணைப்பு குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு
தனியார் நிறுவனத்திற்கு இலவச மின் இணைப்பு குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு
ADDED : டிச 02, 2025 06:08 AM
செங்கல்பட்டு: ஏழை விவசாயி மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தால், இணைப்பு வழங்க மின் வாரியம் மறுத்து வருகிறது. ஆனால், தனியார் நிறுவனத்திற்கு, அதிகாரிகள் இலவச இணைப்பு வழங்கி உள்ளனர். அதை துண்டிக்க, அதிகாரிகள் மறுத்து வருகின்றனர் என, விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில், விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், கலெக்டர் சினேகா தலைமையில் சமீபத்தில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார், மாவட்ட வன அலுவலர் ரவிமினா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜேஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் பேசியதாவது:
கமலதாஸ், விவசாய நலச்சங்க மாவட்ட துணைத்தலைவர்:
செய்யூர் தாலுகாவில் மடையம்பாக்கம், திருவாதுார் உள்ளிட்ட பல இடங்களில், 2,000 ஏக்கர் விவசாய நிலங்களை, தனியார் நிறுவனம் வாங்கி உள்ளது. இந்த பகுதியில், 100க்கும் மேற்பட்ட இலவச மின் இணைப்புகள் உள்ளன.
இந்த இணைப்பை பயன்படுத்தி கிணறுகளில் இருந்து கோடை காலங்களில், கல்குவாரிகளுக்கு லாரிகள் மூலமாக தண்ணீர் விற்பனை செய்யப்படுகிறது.
ஏழை விவசாயி மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தால், மின் இணைப்பு வழங்க, வாரியம் மறுத்து வருகிறது.
ஆனால், தனியார் நிறுவனங்களுக்கு வழங்கிய இலவச மின் இணைப்பை துண்டிக்க, மின்வாரிய அதிகாரிகள் மறுத்து வருகின்றனர்.
செய்யூர் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு மாதந்தோறும், பல ஆயிரம் ரூபாயை லஞ்சமாக, தனியார் நிறுவனம் கொடுத்து வருகிறது. தனியார் நிறுவனம் இலவச மின்சாரம் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும்.
மின்வாரிய அதிகாரிகள்: விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
பழையனுார் மணி, தமிழ்நாடு விவசாயிகள் நலன், நீர் நிலைகள் பாதுகாப்பு சங்க தலைவர்:
கூனம்பட்டரை கிராமத்தைச் சேர்ந்த காவாத்தம்மாள் என்ற விவசாயி, விவசாய மின் இணைப்பு கோரி, 2008ம் ஆண்டு செங்கல்பட்டு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
கடந்த 17 ஆண்டுகளாக மின் வாரியம், மின் இணைப்பு வழங்காமல் அலைக்கழித்து வருகிறது. விவசாயிக்கு மின் இணைப்பு வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெங்கடேசன், விவசாய நலச்சங்க தலைவர்:
செங்கல்பட்டு மாவட்டத்தில், வேளாண்மை பண்ணை அமைக்க, நிலம் ஒதுக்கீடு செய்துதர, மாவட்ட வருவாய் அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கணேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர்:
வேளாண்மை பண்ணை அமைக்க, இடங்களை பார்த்து வருகிறோம். நிலம் இருந்தால், விவசாயிகள் தெரிவிக்கலாம்.
லட்சாதிபதி, விவசாயி:
ஆயப்பாக்கம் கிராமத்தில், அரசுக்கு சொந்தமான 160 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளதை மீட்க வேண்டும். ஆடு, மாடு மேய்க்க இடம் இல்லை. உள்ளாட்சி பகுதிகளில் நாய்களை கட்டுப்படுத்த வேண்டும். கிழக்கு கடற்கரை சாலையில், மாடுகள் திரிவதால், அடிக்கடி சாலை விபத்து ஏற்பட்டு, உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதை தடுக்க, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முரளிமோகன், கரும்பு விவசாயிகள் சங்க தலைவர்:
மாவட்டத்தில், அறுவடை இயந்திரங்கள் குறைவாக உள்ளது. நெல் சாகுபடி அதிகமாக நடக்கிறது. இதற்கு ஏற்றால்போல், அறுவடை இயந்திரங்கள் மற்றும் 'பெல்ட்' இயந்திரம் வாங்க, வேளாண்மை பொறியியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேளாண்மை பொறியியல் துறை அதிகாரிகள்:
வேளாண்மைத் துறையில், அறுவடை இயந்திரங்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சுகுணா, விவசாயி:
கரும்பாக்கம் பகுதியில், நாற்றங்கால் பயிர்களை 50க்கும் மேற்பட்ட மாடுகள் அழித்து வருகின்றன. விவசாய நிலங்களை அழிக்கும் மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மெய்யூர் ஊராட்சியில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூடி திறந்திருந்ததில், அதில் குரங்கு விழுந்து இறந்து கிடந்தது.
ஊராட்சிகளில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் மூடி திறந்திருப்பதை மூட வேண்டும். மெய்யூர் ஏரியில் இருந்து தினமும் காலை 6:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை, லாரிகளில் மண் எடுத்துச் செல்கின்றனர். இதுபற்றி புகார் அளித்தால், மொபைல் போனுக்கு கொலை மிரட்டல் வருகிறது.
சினேகா, கலெக்டர்:
விவசாயிக்கு கொலை மிரட்டல் வந்தால், போலீசில் புகார் அளிக்க வேண்டும்.
இவ்வாறு, கூட்டத்தில் பேசினர்.

