திட்டமிடாமல் அமைத்த தடுப்புச்சுவர் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
திட்டமிடாமல் அமைத்த தடுப்புச்சுவர் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : ஆக 01, 2026 03:39 AM

வண்டலுார்: வண்டலுார் ரயில் நிலையம் எதிரே உள்ள ஜி.எஸ்.டி., சாலை மற்றும் அணுகு சாலைக்கு இடையே மைய தடுப்புச்சுவர் திட்டமிடாமல் வளைவாக அமைக்கப்பட்டு உள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
தாம்பரம் -- செங்கல்பட்டு இடையிலான ஜி.எஸ்.டி., சாலையில், பெருங்களத்துார் அடுத்த இரணியம்மன் கோவில் முதல் வண்டலுார் உயிரியல் பூங்கா வரையிலான 2,400 மீ., துாரமுள்ள ஜி.எஸ்.டி., சாலை, ஆறு வழிச்சாலையாக உள்ளது.
இந்த இடைப்பட்ட துாரத்தில், வண்டலுார் ரயில் நிலையம் அருகே, வாலாஜாபாத் - ஜி.எஸ்.டி., சாலையை இணைக்கும் ரயில்வே மேம்பாலம் உள்ளது.
குறிப்பாக, வாலாஜாபாத் சாலையில் இருந்து செங்கல்பட்டு மார்க்கத்தில் செல்லும் வாகனங்கள், இந்த மேம்பாலம் வழியாக வலது பக்கமாக திரும்பி, ஜி.எஸ்.டி., சாலையுடன் இணைகின்றன.
அவ்வாறு இணையும் இடத்தில், ஜி.எஸ்.டி., சாலைக்கும், அணுகு சாலைக்கும் இடையே 20 மீ., துாரத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
வலது பக்கமாக ஜி.எஸ்.டி., சாலையை நோக்கி வளைந்துள்ள தடுப்புச்சுவரால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர்.
ஜி.எஸ்.டி., சாலையின் அகலம் குறைந்து மேம்பாலத்திலிருந்து வரும் வாகனங்களும், தாம்பரத்திலிருந்து வரும் வாகனங்களும், இந்த தடுப்புச்சுவர் மீது மோதி விபத்திற்குள்ளாகி வருகின்றன.
எனவே, தடுப்புச்சுவரை அகற்ற, நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
