தேசிய வேளாண் உட்கட்டமைப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.50 கோடி கடன் வழங்க இலக்கு
தேசிய வேளாண் உட்கட்டமைப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.50 கோடி கடன் வழங்க இலக்கு
ADDED : ஜூலை 07, 2026 06:34 AM

செங்கல்பட்டு: தேசிய வேளாண் உட்கட்டமைப்பு திட்டத்தில், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு 50 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இத்திட்டத்தில், தொழில் துவங்க, விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
தேசிய வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தில், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு, 2026 -27 ம் ஆண்டிற்கு 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இத்திட்டத்தில், விவசாயிகள், தொழில் முனைவோர் உள்ளிட்டவர்கள், அதிகபட்சம் 2 கோடி ரூபாய் வரை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் வாயிலாக, எந்த நிபந்தனை இன்றியும் பிணையமற்ற கடன் வழங்கப்படுகிறது. விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சுய உதவி குழுக்கள், வேளாண் தொழில் முனைவோர், அரவை ஆலை உரிமையாளர்கள், ஏற்றுமதியாளர்கள், வர்த்தகர்கள், உணவு பதப்படுத்துவோர் இந்த கடனுதவியை பெற தகுதியானவர்கள்.
சேமிப்பு கிடங்குகள், சிப்பம் கட்டும் கூடம், ஆய்வுக்கூடங்கள் - உயிர் உரங்கள் தயாரிப்பு, குளிர் பதன கிடங்குகள், பழுக்க வைக்கும் அறைகள், அறுவடை இயந்திரங்கள், டிரோன் தெளிப்பான்கள் உள்ளிட்ட ஏற்பாடுகளும் செய்துதரப்படும். நவீன மற்றும் இயற்கை இடுபொருள் உற்பத்தி மையம் ஆகியவற்றை செயல்படுத்த, கூட்டுறவு வேளாண்மை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை, வேளாண் வணிகம், மாவட்ட தொழில்துறை ஆகியவை, விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோருக்கு, கடன் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
வங்கியில் கடன் மற்றும் 3 சதவீதம் மானியம் பெற https://agriinfra.dac.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு, அந்தந்த வட்டார உதவி வேளாண்மை அலுவலர்களிடம் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். விபரங்களுக்கு 90806 40338 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் வீரப்பன் தெரிவித்துள்ளார்.
