/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அதிக பாரத்துடன் செல்லும் டிப்பர் லாரிகள் மலைப்பாக்கத்தில் புது சாலை நாசம்
/
அதிக பாரத்துடன் செல்லும் டிப்பர் லாரிகள் மலைப்பாக்கத்தில் புது சாலை நாசம்
அதிக பாரத்துடன் செல்லும் டிப்பர் லாரிகள் மலைப்பாக்கத்தில் புது சாலை நாசம்
அதிக பாரத்துடன் செல்லும் டிப்பர் லாரிகள் மலைப்பாக்கத்தில் புது சாலை நாசம்
ADDED : நவ 14, 2025 01:19 AM

மதுராந்தகம்:தனியார் நிலத்திற்கு இரவு நேரத்தில் மண் எடுத்துச் செல்லும் டிப்பர் லாரிகளால், மலைப்பாளையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தார்ச்சாலை நாசமாகி உள்ளது.
மதுராந்தகம் அருகே கருங்குழி பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இதில் 9, 10, 11 மற்றும் 12வது வார்டுகளில், 4,000க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்களுக்கு சென்னை -- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து செல்லும் மலைப்பாளையம் சாலை, பிரதான சாலையாக உள்ளது.
கருங்குழி பேரூராட்சி மூலமாக, கடந்த ஆறு மாதங்களுக்கு முன், இந்த சாலை புதிதாக அமைக்கப்பட்டது. தற்போது, இப்பகுதியில் உள்ள தனியார் நில உரிமையாளர் ஒருவர், இரவு நேரங்களில் டிப்பர் லாரிகளில், அதிக அளவில் மண் கொண்டு சென்று, நிலத்தில் கொட்டி வருகிறார்.
புதிதாக அமைக்கப்பட்ட இந்த தார்ச்சாலையில், அதிக பாரம் ஏற்றிக் கொண்டு லாரிகள் செல்வதால், 1 கி.மீ., துாரத்திற்கு சாலை கடுமையாக சேதமடைந்து உள்ளது. அதில், பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன.
மேலும், சாலையில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் தடுமாறி வருகின்றனர்.
ஆம்புலன்ஸ் மற்றும் ஆட்டோக்கள் சாலையை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது.
மேலும், சைக்கிளில் பள்ளி செல்லும் மாணவ - மாணவியர், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பெண்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர்.
எனவே, பேரூராட்சி நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

