ரயில் நண்பர்கள் சந்திப்பு விழா கூடுவாஞ்சேரியில் உற்சாகம்
ரயில் நண்பர்கள் சந்திப்பு விழா கூடுவாஞ்சேரியில் உற்சாகம்
ADDED : ஆக 30, 2026 04:31 PM

கூடுவாஞ்சேரி, ஆக. 31-–
ஒரே ரயிலில் தினமும் பயணித்து, வேலைக்கு செல்வோர் நேற்று காலை கூடுவாஞ்சேரி ரயில் நிலைய பூங்காவில் ஒன்று கூடி, ரயில் நண்பர்கள் சந்திப்பு விழாவை உற்சாகத்துடன் நடத்தினர்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் வேலை, தொழில், கல்வி மருத்துவம் உள்ளிட்ட பல தேவைகளுக்காக, செங்கல்பட்டு -– கடற்கரை மார்க்கத்தில் இயக்கப்படும் புறநகர் ரயில்களில், தினமும் பயணிக்கின்றனர்.
இதில், காலை 8:25 மணிக்கு செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து – சென்னை கடற்கரை ரயில் நிலையம் வரை இயக்கப்படும் விரைவு ரயிலில், கடந்த 20 ஆண்டிற்கும் மேலாக பயணிப்போர் பலரும் நண்பர்களாக உள்ளனர்.
ரயில் பயணத்தில் கிடைத்த நட்பை கொண்டாடும் விதமாக ரயில் நண்பர்கள் விழா என்ற நிகழ்ச்சியை நேற்று முன்னெடுத்தனர்.
கூடுவாஞ்சேரி, ரயில் நிலையம் அருகில் உள்ள பூங்காவில், காலை 10 மணிக்கு தொடங்கி 12 மணி வரை, நடந்த இவ்விழாவில், 92 பயணியர், தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.
ரயில் நண்பர்கள் கூறியதாவது:
நாங்கள் அனைவரும் கடந்த 20 ஆண்டிற்கும் மேலாக, ‘செகண்ட் பாஸ்ட்’ என்று அழைக்கப்படும் ரயிலில் ஒன்றாக பயணித்து வருகிறோம்.
தினமும் காலை ஒரே ரயிலில் பயணிப்பதால், ஒருவருக்கொருவர் மெல்ல அறிமுகமாகி, நாளடைவில், நண்பர்களாக மாறினோம்.
எங்கள் நட்பை கொண்டாடும் விதமாக, ரயில் நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை சிறு விழாவாக உற்சாகத்தோடு கொண்டாடினோம்.
இனி, ஆண்டு தோறும் இந்த விழாவை கொண்டாட முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
