/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வார்டு அலுவலகம் கட்டி முடித்தும் திறக்காத மாநகராட்சி; மழையில் நனைந்து நாசமாகும் ஆவணங்கள்
/
வார்டு அலுவலகம் கட்டி முடித்தும் திறக்காத மாநகராட்சி; மழையில் நனைந்து நாசமாகும் ஆவணங்கள்
வார்டு அலுவலகம் கட்டி முடித்தும் திறக்காத மாநகராட்சி; மழையில் நனைந்து நாசமாகும் ஆவணங்கள்
வார்டு அலுவலகம் கட்டி முடித்தும் திறக்காத மாநகராட்சி; மழையில் நனைந்து நாசமாகும் ஆவணங்கள்
ADDED : டிச 09, 2025 06:56 AM

காரப்பாக்கம்: ஓ.எம்.ஆர்., காரப்பாக்கத்தில் புதிய வார்டு அலுவலகம் கட்டி, பருவமழைக்கு முன் பணி முடிந்தும் திறக்கப்படாததால், பழைய அலுவலகத்தில் வெள்ளத்தால் ஆவணங்கள் நாசமடைகின்றன. மேலும், ஊழியர்கள் அச்சத்துடனேயே பணிபுரிந்து வருகின்றனர்.
சோழிங்கநல்லுார் மண்டலம், 198வது வார்டு, ஓ.எம்.ஆர்., காரப்பாக்கத்தில் உள்ள வார்டு அலுவலகம், 1996ம் ஆண்டு கட்டப்பட்டது. கட்டடத்தில் உறுதித்தன்மை இல்லாதபோது, 2017ம் ஆண்டு முதல் மாடி கட்டப்பட்டது. இந்த கட்டடம், சாலை மட்டத்தை விட 5 அடி பள்ளத்தில் உள்ளது. ஒவ்வொரு பருவமழைக்கும், வெள்ளம் புகுந்து மாநகராட்சிக்கு சொந்தமான பல பொருட்கள் நாசமாகும்.
பல ஆவணங்கள் வெள்ளத்தில் நனைந்தது. இதனால், புதிய வார்டு அலுவலகம் கட்டும் பணியை, 1.35 கோடி ரூபாயில், 2023 மார்ச் மாதம், ஆதித்யா என்ற கட்டுமான நிறுவனம் துவங்கியது.
பொறியியல், வரி வசூல், சுகாதாரம், மின்விளக்கு மற்றும் கவுன்சிலர் அலுவலகம் உள்ளிட்ட வசதியுடன், 5,600 சதுர அடி பரப்பில் அமைந்துள்ளது. இந்த பணி, 2024 மார்ச்சில் முடிய வேண்டும்.
ஒப்பந்த நிறுவனத்தின் அலட்சியத்தால், பல மாதங்களாக பணி கிடப்பில் போடப்பட்டது. இதனால், அந்நிறுவனத்திற்கு மாநகராட்சி அபராதம் விதித்தது. பின் பருவமழைக்கு முன் கட்டடத்தை திறக்கும் வகையில் பணி நடைபெற்று முடிந்தது.
பணி முடிந்தும் கட்டடத்தை திறக்காததால், சாலையில் வடிந்த வெள்ளம் வார்டு அலுவலகத்தில் புகுந்து, ஊழியர்கள் பணி செய்ய முடியாத வகையில் பாதிப்பு ஏற்படுத்தியது.
உள்ளே பள்ளம் எடுத்து அதில் தேங்கும் மழைநீரை, மோட்டார் கொண்டு இறைக்கப்படுகிறது. கடந்த 2015 மற்றும் 2023ம் ஆண்டு போல் மழை பெய்தால், வார்டு அலுவலகம் மூழ்கும் அபாயம் உள்ளது.
இது குறித்து, 198வது அ.தி.மு.க., வார்டு கவுன்சிலர் லியோ சுந்தரம் கூறியதாவது:
மழையின்போது உபகரணங்கள், மருந்து, உணவு போன்ற பொருட்கள் வைக்க வார்டு அலுவலகம் முக்கிய பயன்பாடாக இருந்தது. ஆனால், மழையில் எந்த பணியும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மண்டலத்தில் நடந்த 14 கூட்டங்களில், புதிய வார்டு அலுவலகம் குறித்து பேசியுள்ளேன். முறையான பதில் இல்லை. ஊழியர்கள் முறையாக பணி செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ''பணி முடிந்த உடனே, துறை அமைச்சர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து விட்டோம். அமைச்சர் தான் திறப்பு தேதி முடிவு செய்ய வேண்டும். மழைக்கு முன் திறந்திருந்தால், வெள்ள தடுப்பு பணிகளை வேகமாக செய்திருக்க முடியும். பழைய கட்டடத்தில் வெள்ளம் புகுவதால், வரி வசூல், சுகாதாரம், எஸ்.ஐ.ஆர்., பணி பாதிக்கிறது,'' என்றனர்.

