ADDED : ஜூலை 08, 2026 05:11 PM
புழல்: வேன் மோதியதில், சாலையை கடக்க முயன்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
செங்குன்றம் அடுத்த தாமரைப்பாக்கத்தைச் சேர்ந்தவர் மல்லிகா, 69; மீன் வியாபாரி. நேற்று காலை, காவாங்கரை சந்திப்பு அருகே, மொத்த மீன் விற்பனை சந்தையில் மீன்களை வாங்கி, ஜி.என்.டி., சாலையை கடக்க முயன்றார்.
அப்போது, அவ்வழியே வந்த மினி வேன் மோதியதில் துாக்கி வீசப்பட்ட மல்லிகா, தலையில் பலத்த காயமடைந்து அங்கேயே உயிரிழந்தார்.
மாதவரம் போக்குவரத்து போலீசார், உடலை கைப்பற்றி, ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து ஏற்படுத்திய மினி வேன் ஓட்டுனரான பாடியநல்லுாரைச் சேர்ந்த கார்த்திகேயன், 23, என்பவரை கைது செய்தனர்.
காவாங்கரை சந்திப்பில் இது போன்ற விபத்து அடிக்கடி நடக்கிறது. 10 நாட்களுக்கு முன், சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு சென்று திரும்பிய பெண், லாரி மோதி உயிரிழந்தார்.
காவாங்கரை சந்திப்பில் உள்ள மீன் சந்தையில் இருந்து வெளியே வரும் வாகனங்கள், அணுகு சாலையிலேயே எதிர் திசையில் வருவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
மீன் சந்தையில் இருந்து வெளியே வரும் வாகனங்களை புழல் ஏரி அருகே, நெல் அரிசி மண்டப சிக்னலில் ‘யு – டர்ன்’ கொடுத்து மாற்று வழி அமைத்தால்தான் விபத்துகளை தடுக்க முடியும் என, வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.
