/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வடபழனி முருகன் கோவில் வளாகத்தில் திருக்கல்யாண விருந்துக்கு அனுமதியில்லை சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
/
வடபழனி முருகன் கோவில் வளாகத்தில் திருக்கல்யாண விருந்துக்கு அனுமதியில்லை சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
வடபழனி முருகன் கோவில் வளாகத்தில் திருக்கல்யாண விருந்துக்கு அனுமதியில்லை சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
வடபழனி முருகன் கோவில் வளாகத்தில் திருக்கல்யாண விருந்துக்கு அனுமதியில்லை சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
ADDED : பிப் 26, 2025 12:13 AM
சென்னை கோவிலே அன்னதானத் திட்டத்தை செயல்படுத்துவதால், கோவில் வளாகத்தில் பக்தர்கள், திருக்கல்யாண வைபவ விருந்து பரிமாற அனுமதிக்கப்படுவதில்லை என்ற நிர்வாக முடிவில் தலையிட போதிய முகாந்திரம் இல்லை என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வடபழனி முருகன் கோவில் வளாகத்துக்குள், பக்தர்களுக்கு 'திருக்கல்யாண விருந்து' அளிக்க அனுமதி மறுத்ததை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், சங்கர் என்பவர் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு:
சென்னை வடபழனி முருகன் கோவில் வளாகத்துக்குள், வைகாசி புஷ்ப பல்லாக்கு மற்றும் திருக்கல்யாண விழாவின்போது, பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்து வைக்க அனுமதி கோரினேன். ஆனால், அதற்கு ஹிந்து அறநிலையத் துறை அதிகாரிகள் அனுமதி வழங்க மறுத்தனர்.
இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்து விட்டார். எனவே, பக்தர்களுக்கு விருந்து அளிக்க அனுமதி வழங்க, ஹிந்து அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அறநிலையத் துறை தரப்பில் வழக்கறிஞர் கே.கார்த்திகேயன் ஆஜராகி, ''கோவில் நிர்வாகமே பக்தர்களுக்கு அன்னதானம் செய்வதால், திருக்கல்யாண விருந்தை கோவில் வளாகத்துக்குள் நடத்தஅனுமதிக்க முடியாது. பக்தர்கள் விரும்பினால், அன்னதானத்துக்கு நன்கொடை வழங்கலாம்,'' என்றார்.
இதை ஏற்று, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
கோவிலே அன்னதானத் திட்டத்தை செயல்படுத்துவதால், கோவில் வளாகத்தில் பக்தர்கள் திருக்கல்யாண விருந்து பரிமாற அனுமதிக்கப்படுவதில்லை என நிர்வாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டுதான், தனி நீதிபதி, மனுதாரர் கோரிக்கையை ஏற்கவில்லை.
கோவில் நிதியில் இருந்து, கடந்தாண்டு திருவிழாவின்போது, 750 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது என்று, தனி நீதிபதி கூறியுள்ளார்; அதில் உடன்படுகிறோம். எனவே, மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

