/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வழிந்தோடிய கழிவுநீர் திருவொற்றியூரில் மறியல்
/
வழிந்தோடிய கழிவுநீர் திருவொற்றியூரில் மறியல்
ADDED : ஜூலை 12, 2024 12:35 AM
திருவொற்றியூர், திருவொற்றியூர் மண்டலம், நான்காவது வார்டு, வி.பி.நகரில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்காக, ஏற்கனவே இருக்கும் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்படுத்தப்பட்டு, கட்டுமான பணிகள் நடக்கின்றன. பின், அந்த அடைப்பை எடுத்து விடாமல், ஒப்பந்த ஊழியர்கள் சென்று விடுகின்றனர்.
இதனால், கழிவுநீர் தேக்கமடைந்து தெருக்களில் வழிந்தோடுவதால், குடியிருப்புவாசிகள் வெளியே நடமாட முடியாத சூழல் ஏற்பட்டது. கொசுத் தொல்லை, நோய் தொற்று அபாயமும் இருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, தெருக்கள் முழுதும் கழிவுநீர் வழிந்தோடி, கடும் துர்நாற்றம் வீசியது.
இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் ஜெயராமனுடன், வி.பி.நகர் - - மணலி விரைவு சாலை சந்திப்பில், நள்ளிரவில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்த ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, நிலைமையை சீர் செய்தனர். அதன்பின், மறியல் கைவிடப்பட்டது.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.

