பஸ் பயணியிடம் போன் பறிக்க முயன்ற சிறுவனுக்கு தர்ம அடி
பஸ் பயணியிடம் போன் பறிக்க முயன்ற சிறுவனுக்கு தர்ம அடி
UPDATED : ஜூலை 01, 2026 06:13 PM
ADDED : ஜூலை 01, 2026 04:01 PM
குரோம்பேட்டை: பேருந்து பயணியிடம் மொபைல் போன் பறிக்க முயன்ற 16 வயது சிறுவனுக்கு, பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
கேளம்பாக்கத்தில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் பணிபுரிபவர் ஜெபசிங் துரை, 55. இவர், ஜூன்30 மாலை, குரோம்பேட்டை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தார். அங்கு வந்த 16 வயது சிறுவன், ஜெபசிங் துரையின் 13,000 ரூபாய் மதிப்பிலான மொபைல் போனை பறிக்க முயன்றான்.
சுதாரித்த அவர் சத்தம் போடவே, பேருந்து நிறுத்தத்தில் இருந்த பொதுமக்கள் சிறுவனை மடக்கி பிடித்து, தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த சிறுவனுக்கு, தாம்பரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
விசாரணையில், ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் என்பதும், மூன்று நாட்களுக்கு முன் வீட்டில் இருந்து கோபித்துக்கொண்டு சென்னை வந்ததும் தெரிய வந்தது. எங்கு செல்வது என தெரியாமல் சுற்றி வந்த சிறுவன், உறவினர்களிடம் பேசுவதற்கு மொபைல் போன் இல்லாததால், மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது. சிறுவனை கைது செய்த குரோம்பேட்டை போலீசார், கெல்லீஸ் சிறார் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.
