தண்டுரையில் பாழடைந்த மீன் சந்தை கட்டடத்தை இடிக்கும் பணி தொடக்கம்
தண்டுரையில் பாழடைந்த மீன் சந்தை கட்டடத்தை இடிக்கும் பணி தொடக்கம்
ADDED : நவ 04, 2026 06:03 PM

ஆவடி: தண்டுரையில் பாழடைந்து இருந்த மீன் சந்தை கட்டடத்தை இடிக்கும் பணி இன்று (நவ.,4) தொடங்கியது. அதே இடத்தில், 2.88 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நவீன வசதிகளுடன் புதிய மீன் சந்தை அமைக்க ஆவடி மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
ஆவடி அடுத்த பட்டாபிராம், தண்டுரை, மாங்குளம் பகுதியில் மூன்று தலைமுறைகளாக பட்டாபிராம் மீன் சந்தை செயல்பட்டு வந்தது. பட்டாபிராம் ரயில் நிலையத்தில் இருந்து, 200 மீட்டரில் அமைந்துள்ள இந்த சந்தையில், 96 கடைகள் உள்ளன.
இங்கு, பட்டாபிராம், ஆவடி, திருநின்றவூர், திருவள்ளூர் உள்ளிட்ட சுற்றுவட்டார மக்கள், மீன் வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக மீன் சந்தை கட்டடம் சேதமடைந்து, கூரைகள் பெயர்ந்து இருந்தன. இதனால், பெரும் விபத்து அபாயம் நிலவி வந்தது.
இது குறித்து, நம் நாளிதழில் வெளியான செய்தியின் எதிரொலியாக, பழைய கட்டடத்தை இடித்துவிட்டு, 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 150 மீன் கடைகள், 50 இதர கடைகள், சேமிப்பு அறை, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் புதிய சந்தை வளாகம் அமைக்க, ஆவடி மாநகராட்சி திட்டமிட்டது.
சட்டசபை தேர்தல் மற்றும் மீன் வியாபாரிகளுக்கு மாற்று இடம் தேர்வு செய்வதில் ஏற்பட்ட இழுபறி காரணமாக, பழைய சந்தை கட்டடத்தை இடிக்கும் பணி தள்ளிப்போனது. மேலும், ஒரே கட்டமாக சந்தை அமைக்க, 6 கோடி ரூபாய் செலவிட முடியாது என, உள்ளாட்சி நிர்வாகம் தெரிவித்தது.
இதையடுத்து, 2.88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் புதிய மீன் சந்தை அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதில், ‘பார்க்கிங்’ வசதி ஏற்படுத்த திட்டமிடப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பழைய சந்தை கட்டடத்தை இடிப்பதற்காக, நேற்று (நவ.,3) மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இன்று காலை முதல் ஆவடி மாநகராட்சி சார்பில், ‘பொக்லைன்’ இயந்திரம் மூலம் பழைய கட்டடத்தை இடிக்கும் பணி தொடங்கியது.
பழைய மீன் சந்தைக்கு அருகில் உள்ள காலி இடத்தில், இரண்டு நாட்களில் தற்காலிக சந்தை செயல்படும் என, மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
