'தினமலர்' நாளிதழ் இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டி வரும் 11ல் தாம்பரம், அண்ணா நகரில் நடக்கிறது
'தினமலர்' நாளிதழ் இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டி வரும் 11ல் தாம்பரம், அண்ணா நகரில் நடக்கிறது
UPDATED : ஜூலை 09, 2026 03:28 AM
ADDED : ஜூலை 09, 2026 01:17 AM

சென்னை: 'தினமலர்' நாளிதழ் மற்றும் 'ராஜலட்சுமி இன்ஸ் டிடியூட் ஆப் டெக்னாலஜி' கல்லுாரி இணைந்து நடத்தும், 'இன்ஜினியரிங் கவுன்சிலிங்' வழிகாட்டி நிகழ்ச்சி, சென்னை மேற்கு தாம்பரம், அண்ணா நகர் பகுதிகளில், வரும் 11ம் தேதி நடக்க உள்ளது.
அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும், இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கான இளநிலை மாணவர் சேர்க்கை, தொழில்நுட்ப கல்வி இயக்கம் சார்பில், ஒவ்வோர் ஆண்டும் 'ஆன்லைன்' வழியே நடத்துகிறது.
தரவரிசை பி.இ., - பி.டெக்., படிக்க விரும்பும், பிளஸ் 2 முடித்த மாணவ - மாணவியருக்கு வழிகாட்டும் வகையில், தமிழகம் முழுதும், 'தினமலர்' நாளிதழ் சார்பில், ஒவ்வோர் ஆண்டும் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி, நடத்தப்பட்டு வருகிறது.
நடப்பாண்டுக்கான இன்ஜினியரிங் கவுன்சிலிங் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 'கட் ஆப்' மதிப்பெண்கள், 10 வரை குறைய வாய்ப்பு இருப்பதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், 'தின மலர்' நாளிதழ் மற்றும் ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரி இணைந்து நடத்தும், இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி, வரும் 11ம் தேதி நடக்கிறது.
வழிமுறை முதலாவதாக, சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள ராஜகோபால திருமண மஹாலில், காலை 10:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடக்கிறது.
அடுத்ததாக, மேற்கு அண்ணா நகரில் உள்ள, எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி மற்றும் ஜூனியர் கல்லுாரி வளாகத்தில், மாலை 3:00 மணி முதல் 5:30 மணி வரை நடக்கிறது.
இந்நிகழ்ச்சியில், 'ஆன்லைன் கவுன்சிலிங்' நுணுக்கங்கள், சரியான முறையில் கல்லுாரிகளை தேர்வு செய்வதற்கான வழிமுறை, மாணவர் சேர்க்கை ஆணை பெறுதல், கவுன்சிலிங் நடைமுறையில், இந்த ஆண்டு கொண்டு வரப்பட்டு உள்ள புதிய மாற்றங்கள் ஆகியவை குறித்து, தமிழ்நாடு இன்ஜினியரிங் சேர்க்கை செயலர் புருஷோத்தமன் எடுத்துரைக்கிறார்.
அதேபோல், நடப்பாண்டு, எந்தெந்த 'கட் ஆப்' மதிப்பெண்களுக்கு, எந்த கல்லுாரி கிடைக்க வாய்ப்பு, நவீன தொழில்நுட்ப படிப்புகளின் எதிர்காலம், சிறந்த கல்லுாரியை தேர்வு செய்யும் முறை என, மாணவர்களின் சந்தேகங்கள் குறித்து, கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி விளக்கம் அளிக்கிறார். மாணவர்கள் மற்றும் பெற்றோர் நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்; அனுமதி இலவசம்.
