த.வெ.க.,விற்கு தாவும் தி.மு.க., கவுன்சிலர்கள் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கேட்டு பேச்சு
த.வெ.க.,விற்கு தாவும் தி.மு.க., கவுன்சிலர்கள் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கேட்டு பேச்சு
ADDED : ஜூலை 03, 2026 01:34 AM
- நமது நிருபர் -:
சென்னை மாநகராட்சியின் தி.மு.க., கவுன்சிலர்கள் 10க்கும் மேற்பட்டோர், த.வெ.க.,வில் இணைய தயாராகி வருகின்றனர். அவ்வாறு இணைந்தால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு தர வேண்டும் என, பேச்சு நடத்தி வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியில், 151 தி.மு.க., கவுன்சிலர்கள் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, அ.தி.மு.க., கவுன்சிலர்கள், 15 பேர் இருந்த நிலையில், அக்கட்சியின் உட்கட்சி பிரச்னையால் பலர், த.வெ.க.,விற்கு தாவி வருகின்றனர். தற்போது வரை, ஐந்து கவுன்சிலர்கள் த.வெ.க.,வில் இணைந்துள்ளனர்.
அதேபோல், தி.மு.க.,வைச் சேர்ந்த, 10க்கும் மேற்பட்ட கவுன்சிலர்களும், த.வெ.க.,வில் இணைய பேச்சு நடத்தி வரும் தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட, த.வெ.க.,வில் வாய்ப்பு கேட்டு பேச்சு நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, தி.மு.க., கவுன்சிலர்கள் சிலர் கூறியதாவது:
சென்னை மாநகராட்சியில் தி.மு.க., பக்கம் இருந்த மக்கள் செல்வாக்கு, த.வெ.க., பக்கம் சென்றுவிட்டது.
இதனால், ஏற்கனவே இருக்கும் கவுன்சிலர்கள், மீண்டும் தி.மு.க.,வில் போட்டியிட்டால் வெற்றி பெற முடியுமா என்ற சந்தேகத்தில் உள்ளனர். அவர்கள், த.வெ.க.,வில் இணைய பேச்சு நடத்தி வருகின்றனர்.
அதன்படி, த.வெ.க., வில் இணைந்தபின், வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். த.வெ.க., தரப்பிலும், கட்சி மேலிடத்தில் ஆலோசித்து முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே, த.வெ.க., வில் இணைந்த கவுன்சிலர்களுக்கு, த.வெ.க., சார்பில் போட்டியிடலாம் என, அக்கட்சி உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதனால், நமக்கும் த.வெ.க.,வில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என, கவுன்சிலர்கள் பலர் த.வெ.க.,வில் இணைய காத்திருக்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
