அமைச்சரின் சர்ச்சை வீடியோ :கொலை மிரட்டல் வருவதாக தி.மு.க., பிரமுகர் புகார்
அமைச்சரின் சர்ச்சை வீடியோ :கொலை மிரட்டல் வருவதாக தி.மு.க., பிரமுகர் புகார்
UPDATED : ஜூலை 01, 2026 06:08 PM
ADDED : ஜூலை 01, 2026 06:01 PM
தாம்பரம்: அமைச்சர் சரத்குமார் போதை பொருள் பயன்படுத்தியதாக வெளியாகியுள்ள வீடியோவை தான் பதிவிட்டதாக தவறாக நினைத்து, தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், உரிய பாதுகாப்பு வழங்கும்படியும், தி.மு.க., பேச்சாளர் சரண்ராஜ், போலீசில் புகார் அளித்துள்ளார்.
மேற்கு தாம்பரம், சிவராஜ் தெருவைச் சேர்ந்தவர் சரண்ராஜ், 34; தி.மு.க.,வின் பேச்சாளர். இவர், தாம்பரம் காவல் நிலையத்தில், நேற்று முன்தினம் ஒரு புகார் அளித்துள்ளார்.
அதன் விபரம்:
ஆறாம் முதல் 10 வகுப்பு வரை, மேற்கு தாம்பரம், சேவாசதன் பள்ளியில், நானும், தற்போதைய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் சரத்குமாரும் ஒன்றாக படித்தோம். அதன் பின் வேறு வேறு கல்லுாரிகளில் படித்தோம். ஆனாலும் நாங்கள், நட்புடன் பழகி வந்தோம்.
இந்நிலையில், அமைச்சரான சரத்குமார், கடந்த 2022ல் சென்னையில் நடந்த ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியின்போது போதை பொருள் பயன்படுத்தியதாக ஒரு வீடியோ வெளியானது. இது பொதுவெளியில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்த வீடியோவை நான் பதிவிட்டடதாக தவறாக நினைத்து, 'இன்ஸ்டாகிராம்' எனும் சமூக வலைதளம் மூலம், எனக்கு கொலை மிரட்டல் வருகிறது.
கடந்த மாதம் 28ம் தேதி, வீட்டின் அருகில் நின்றிருந்த இரு மர்ம நபர்கள் சில ஆயுதங்களை காட்டி அச்சுறுத்தினர். எனக்கும், என் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
புகார் குறித்து, தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
