/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'சர்வதேச செஸ் வீரர்களுக்கும் எலைட் உதவித்தொகை'
/
'சர்வதேச செஸ் வீரர்களுக்கும் எலைட் உதவித்தொகை'
ADDED : டிச 15, 2023 01:17 AM
சென்னை, ''தமிழகத்தின் சிறந்த செஸ் வீரர்களுக்கும் எலைட் திட்டத்தின் வாயிலாக உதவித்தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது,'' என, தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறையின் கூடுதல் தலைமை செயலர் அதுல்ய மிஸ்ரா பேசினார்.
தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், சென்னை லீலா பேலஸில், இன்று முதல் 21ம் தேதி வரை, சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. இதை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமை செயலர் அதுல்ய மிஸ்ரா நேற்று துவக்கி வைத்தார்.
இதில், இந்தியா, ஈரான், அர்மீனியா, ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளில் இருந்து 8 சர்வதேச கிராண்ட்மாஸ்டர்கள் பங்கேற்கின்றனர். அவர்கள், ஏழு ரவுண்ட்-ராபின் சுற்றுகளில் கிளாசிக் செஸ் வகையில் விளையாடுவர். மேலும், நாட்டின் சிறந்த செஸ் கிராண்ட்மாஸ்டர்களான குகேஷ், அர்ஜுன் எரிகைசி உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.
போட்டியை துவக்கி வைத்து, அதுல்ய மிஸ்ரா பேசிதயாவது:
உலக செஸ் போட்டியில், இந்தியாவின் கை ஓங்கி உள்ளது. அதில், தமிழக வீரர்கள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றனர். செஸ் ஒலிம்பியாடுக்குப் பின், தமிழகம் செஸ் வீரர்களின் மையமாகி உள்ளது. விரைவில், ஒலிம்பிக் போட்டியிலும் இவ்விளையாட்டு இடம்பெறலாம். தற்போது, ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் வெற்றிபெறும் விளையாட்டு வீரர்களுக்கு, 'எலைட்' திட்டத்தின் வாயிலாக 25 லட்சம் ரூபாய் வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது. இனி, அத்திட்டத்தில் சர்வதேச செஸ் வீரர்களும் பயன்பெறும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, தமிழக செஸ் சங்கத் தலைவர் மாணிக்கம், மைக்ரோசென்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் கைலாசநாதன், அருணா விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

