/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரேஷன் கடை வேலை நேரம் மாற்றி அமைக்க அரசு முடிவு
/
ரேஷன் கடை வேலை நேரம் மாற்றி அமைக்க அரசு முடிவு
ADDED : டிச 07, 2025 05:12 AM
சென்னை: இரவில் ரேஷன் ஊழியர்கள் வீடு திரும்ப சிரமப்படுவதால், சென்னையில் ரேஷன் கடை வேலை நேரத்தை மாற்ற, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில், கார்டுதாரர்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்த கடைகள், சென்னையில் காலை 8:30 மணி முதல், மதியம் 12:30 மணி வரையும், பிற்பகல் 3:00 மணி முதல் இரவு 7:00 மணி வரையும் செயல்படுகின்றன.
பிற மாவட்டங்களில், காலை 9:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரையும், பிற்பகல் 2:00 மணி முதல் மாலை 6:00 மணி வரையும் செயல்படுகின்றன.
சென்னையில் உள்ள ரேஷன் கடைகளில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பலர் பணிபுரிகின்றனர். அவர்கள், போக்குவரத்து நெரிசலால், காலை 8:30 மணிக்கு கடைக்கு வரவும், இரவு 7:00 மணிக்கு கடைகளை மூடி விற்பனை விபரங்களை சரிபார்த்து, வீடு செல்லவும் சிரமப்படுகின்றனர்.
எனவே, சென்னையில் ரேஷன் கடை வேலை நேரத்தை மாற்றி அமைக்குமாறு, ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக, கூட்டுறவு துறை உயரதிகாரிகளை, ரேஷன் ஊழியர்கள் சமீபத்தில் சந்தித்து வலியுறுத்தினர்.
சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் நான்கு மாதங்களே உள்ளது. எனவே, மற்ற மாவட்டங்களில் இருப்பது போல், சென்னையிலும் வேலை நேரத்தை, காலை 9:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரையும், பிற்பகல் 2:00 மணி முதல் மாலை 6:00 மணி வரையும் மாற்ற, அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக, மதிய உணவு இடைவேளைக்காக கடைகளை மூடப்படும் நேரம், 2:30 மணி நேரமாக இருப்பது, தற்போது ஒரு மணி நேரமாக குறைக்கப்பட உள்ளது.

