/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
துாய்மை பணியாளர்கள், போலீசார் தள்ளுமுள்ளு சி.டி.எச்., சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
/
துாய்மை பணியாளர்கள், போலீசார் தள்ளுமுள்ளு சி.டி.எச்., சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
துாய்மை பணியாளர்கள், போலீசார் தள்ளுமுள்ளு சி.டி.எச்., சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
துாய்மை பணியாளர்கள், போலீசார் தள்ளுமுள்ளு சி.டி.எச்., சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
ADDED : டிச 07, 2025 05:43 AM

அம்பத்துார்: துாய்மை பணியை தனியாரிடம் மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அம்பத்துார் மண்டல துாய்மை பணியாளர்கள் நேற்று, திடீர் மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீசாருக்கும், பணியாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், சி.டி.எச்., சாலையில் ஒன்றரை மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் குப்பை மேலாண்மை பொறுப்பு, தனியாரிடம் ஒப்பந்த அடிப்படையில் மாற்றப்பட்டு வருகிறது.
சலசலப்பு ராயபுரம், திரு.வி.க., நகர் ஆகிய மண்டலங்களில் துாய்மை பணி மேற்கொள்ள, தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், அம்மண்டலங்களில் துாய்மை பணியாளர்கள், பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அம்பத்துார் மண்டலத்தில் துாய்மை பணி, தனியாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் அதிருப்தியடைந்த அந்த மண்டலத்தில் பணியாளர்கள் பலர், நேற்று காலை, சீருடை அணியாமல் பணிக்கு சென்றனர். சீருடை அணிந்து பணிக்கு செல்லுமாறு, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியும், அவர்கள் கேட்கவில்லை.
இதனால், துாய்மை பணியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பணியாளர்களுக்கு ஆதரவாக அங்கு வந்த அ.தி.மு.க.,வினர், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து கொரட்டூர் போலீசார் வந்து பேச்சு நடத்தியதை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.
ஒன்றரை மணி நேரம் இந்நிலையில், அம்பத்துார் மண்டல அலுவலகத்திற்கு, சென்னை மாநகராட்சி மத்திய வட்டார துணை கமிஷனர் கவுசிக், நேற்று மதியம் வந்தார்.
அவரிடம், துாய்மை பணியை தனியாரிடம் ஒப்படைக்கக்கூடாது, மழைக்காலத்தில் பணிபுரிய ஏதுவாக, 'ரெயின் கோட்' வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இது குறித்து அவர், எந்த தெளிவான பதிலும் தெரிவிக்காமல் சென்றதால், அதிருப்தியடைந்த பணியாளர்கள், துணை கமிஷனர் கவுசிக்கின் காரை வழிமறித்தனர். அப்போது, அங்கு வந்த அம்பத்துார் போலீசார் மற்றும் பணியாளர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த பணியாளர்கள் 200க்கும் மேற்பட்டோர், சி.டி.எச்., சாலையில் அமர்ந்து, மறியலில் ஈடுபட்டனர். 'பிக் ஹவர்ஸ்' நேரம் என்பதால், போக்குவரத்து நெரிசலால் அப்பகுதி ஸ்தம்பித்தது.
தகவலறிந்து சென்ற செங்குன்றம் காவல் துணை கமிஷனர் பாலாஜி மற்றும் 50க்கும் மேற்பட்ட போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட பணியாளர்களுடன் பேச்சு நடத்தினர்.
ஒன்றரை மணி நேர போராட்டத்திற்கு பின் அனைவரும் கலைந்து சென்றதை அடுத்து, போக்குவரத்து சீரானது.

