ADDED : நவ 13, 2025 12:37 AM

பசுமை பூங்காவாகிறது அராபத் ஏரி
ஆவடி: திருமுல்லைவாயில், சி.டி.எச்., சாலை - சோழம்பேடு பிரதான சாலை ஒட்டி 26.40 ஏக்கரில் அராபத் ஏரி அமைந்துள்ளது. கழிவுநீர் கலந்து மாசடைந்த ஏரியை சுத்தம் செய்ய கோரிக்கை வலுத்தது. இதையடுத்து, ஏரியை புனரமைத்து பசுமை பூங்காவாக மாற்ற ஆவடி மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடக்க உள்ளன. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.
நில மோசடிக்கு உடந்தையாக இருந்தவர் கைது
ஆவடி: அரக்கோணத்தைச் சேர்ந்தவர் ஹரி, 51. இவருக்கு, மோரை, கோலோச்சி நகரில், 1,200 சதுர அடி நிலம் இருந்தது. நிலத்தின் மதிப்பு 15 லட்சம் ரூபாய். இந்த நிலத்தை பிரபு என்பவரிடம் அடமானம் வைத்துள்ளார். பிரபு மோசடி செய்து தமிழ்ச்செல்வன் என்பவருக்கு பொது அதிகாரம் கொடுத்தும், மேலும், இடத்தை இரண்டாக பிரித்து அசோக், சரண்யா ஆகியோருக்கு கிரையம் செய்து கொடுத்ததும் தெரிந்தது. விசாரித்த ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார், சாட்சி கையெழுத்து போட்ட கொளத்துாரைச் சேர்ந்த பிரசாத், 44, என்பவரை, நேற்று கைது செய்தனர்.
மாணவியை தாக்கிய வாலிபர் கைது
பெரம்பூர்: வியாசர்பாடி, கக்கன்ஜி நகரைச் சேர்ந்த 19 வயது கல்லுாரி மாணவியும் அவரது தங்கையும், வீட்டருகே உள்ள மளிகை கடைக்கு சென்றனர். அப்போது எதிரே வந்த ஆட்டோ, இவர்கள் மேல் இடிக்கும் வகையில் சென்றது. இது தொடர்பாக தகராறு ஏற்பட்டதில், ஆட்டோ ஓட்டுநரான அம்பத்துாரைச் சேர்ந்த சந்தோஷ்குமார், 19, மாணவியை தாக்கினார். விசாரித்த செம்பியம் போலீசார், சந்தோஷ் குமாரை கைது செய்தனர்.
முதியவர் துாக்கிட்டு தற்கொலை
திருவொற்றியூர்: திருவொற்றியூர், மேற்கு மாடவீதியைச் சேர்ந்த ராஜேந்திரன், 62. மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர், தற்கொலை செய்து கொள்ள போவதாக, மிரட்டி வந்துள்ளார். இந்தநிலையில், நேற்று அதிகாலை, வீட்டை வெளிபக்கம் பூட்டி விட்டு, மொட்டை மாடிக்கு செல்லும் இரும்பு படிக்கட்டில் லுங்கியால் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள், அவரை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு மருத்துவ பரிசோதனையில் இறந்தது தெரிய வந்தது.
கஞ்சா வியாபாரிக்கு 'மாவுக்கட்டு'
ஓட்டேரி: ஓட்டேரியில் பனந்தோப்பு ரயில்வே காலனி பகுதியில் கஞ்சா விற்ற, கொளத்துார், சிவசக்தி நகரைச் சேர்ந்த ‛பாக்சர்' ஆனந்த், 30, என்பவர், ஓட்டேரி போலீசார் நேற்று பிடிக்க முயன்றபோது, வழுக்கி விழுந்தார். இதில் அவரது வலது கால் உடைந்தது. அவரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்து மாவுகட்டு போடப்பட்டது. மேலும் மற்றொரு நபரான ஓட்டேரி, ஐதர் கார்டன் பகுதியை சேர்ந்த வெற்றிவேல், 34, என்ற நபரையும் போலீசார் கைது செய்தனர்.
வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடிக்கு 'காப்பு'
வியாசர்பாடி: வியாசர்பாடி, 'பி' கல்யாணபுரத்தைச் சேர்ந்தவர் சுகுமார், 46. இவர், நேற்று வீட்டிற்கு நடந்து சென்றபோது, மர்ம நபர் ஒருவர் கத்தி முனையில் வழிமறித்து 500 ரூபாய் பறித்து சென்றார். விசாரித்த வியாசர்பாடி போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட 'பி' கல்யாணபுரம் பகுதியில் ரவுடியாக வலம் வரும் கவுதம், 22, என்பவரை, நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

