தியாகராஜா தியேட்டர் 'மல்டிபிளக்ஸ்' வளாகமாகிறது ரூ.500 கோடியில் புதிய திட்டம்
தியாகராஜா தியேட்டர் 'மல்டிபிளக்ஸ்' வளாகமாகிறது ரூ.500 கோடியில் புதிய திட்டம்
ADDED : ஜூலை 06, 2026 02:46 AM
சென்னை: திருவான்மியூர் தியாகராஜா தியேட்டர், 500 கோடி ரூபாயில் அடுக்குமாடி வணிக மற்றும் மல்டிபிளக்ஸ் வளாகமாக மாற உள்ளது.
சென்னையில் ஒரு காலத்தில், ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு தியேட்டர் சினிமா ரசிகர்களின் அடையாளமாக இருந்தது. கால மாற்றத்தில், இந்த தியேட்டர்கள் வணிக வளாகங்களாக, அடுக்குமாடி குடியிருப்பு களாக மாறி வருகின்றன.
அந்த வகையில், 'ஆனந்த், சாந்தி, வெலிங்டன்' போன்ற தியேட்டர்கள் இன்று வணிக, அலுவலக வளாகங்களாக மாறியுள்ளன. அந்த வரிசையில் திருவான்மியூர் எல்.பி., சாலையில் அப்பகுதிக்கான அடையாளமாக இருந்த தியாகராஜா தியேட்டர் உருமாற்றத்துக்கு தயாராகி உள்ளது.
தென் சென்னையில், 1980, 1990களில் புதிதாக வெளியாகும் திரைப்படங்களை பார்க்க, தென் சென்னையில் பெரும்பாலான ரசிகர்கள் திருவான்மியூரில் உள்ள தியாகராஜா தியேட்டரை தான் தேடி வருவர்.
அந்த அளவுக்கு சினிமா ரசிகர்களின் மறக்க முடியாத இடமாக, இந்த தியேட்டர் இருந்தது.
இந்நிலையில், இந்த தியேட்டர் வளாகத்தை நவீன சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைக்க, அதன் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதன்படி, பி.பி.சி.எல்., என்ற பிரபல கட்டுமான நிறுவனத்துடன், தியேட்டர் உரிமையாளர்கள் குடும்பத்தினர் கூட்டு மேம்பாட்டு ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இதன்படி, இந்த தியேட்டர் அமைந்துள்ள, 1.5 ஏக்கர் பரப்பு நிலத்தை, 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில், வணிக மற்றும் மல்டிபிளக்ஸ் வளாகமாக மாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இதனால், தியாகராஜா தியேட்டர் விரைவில் மல்டிபிளக்ஸ் ஆக மாற்றப்பட உள்ளது.
சென்னையில் நிலத்தின் மதிப்பு வெகுவாக உயர்ந்து வரும் நிலையில், பொருளாதார ரீதியில் இது போன்ற வளாகங்கள் மறுமேம்பாடு செய்யப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகி உள்ளது என, ரியல் எஸ்டேட் துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.
