/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் குவியும் குப்பையை அகற்ற என்ன திட்டம்? மாநகராட்சி அறிக்கை கேட்குது தீர்ப்பாயம்
/
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் குவியும் குப்பையை அகற்ற என்ன திட்டம்? மாநகராட்சி அறிக்கை கேட்குது தீர்ப்பாயம்
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் குவியும் குப்பையை அகற்ற என்ன திட்டம்? மாநகராட்சி அறிக்கை கேட்குது தீர்ப்பாயம்
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் குவியும் குப்பையை அகற்ற என்ன திட்டம்? மாநகராட்சி அறிக்கை கேட்குது தீர்ப்பாயம்
ADDED : டிச 09, 2025 04:46 AM
சென்னை: பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், குப்பை அகற்றுவதற்கான திட்டம் குறித்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு, சென்னை மாநகராட்சிக்கு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜனவரி 16ம் தேதி காணும் பொங்கலன்று, மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் கூடினர். இதனால் கடற்கரை முழுதும் குப்பை மேடானது.
இது தொடர்பாக நாளிதழ்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் தாமாக முன்வந்து, வழக்கு பதிந்து விசாரித்த தீர்ப் பாயம், 'கடற்கரையின் துாய்மையை பாதுகாப்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு இல்லாதது வேதனை அளிக்கிறது. எனவே, காணும் பொங்கலுக்கு விடுமுறை அறிவிக்கக்கூடாது என, அரசுக்கு பரிந்துரைக்க உள்ளோம்' என்று தெரிவித்தது.
தீர்ப்பாய உத்தரவுப்படி மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளை, சென்னை மாநகராட்சி துாய்மைப்படுத்தியது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர்குழு உறுப்பினர் பிரசாந்த் கர்கவா ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
சென்னை மாநகராட்சி தாக்கல் செய்த அறிக்கையில், கடந்த ஜனவரியில் காணும் பொங்கலுக்கு பின் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை துாய்மைப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மட்டுமே கூறப்பட்டுள்ளது. அதனால், இப்போது எந்தப் பலனும் இல்லை.
சென்னை மாநகரில் மக்கள் அதிகம் கூடும் மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் குவியும் குப்பையை அகற்ற என்ன திட்டம் உள்ளது என்பது குறித்து, சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
கடற்கரை உள்ளிட்ட பொது இடங்களை துாய்மையாக பராமரிப்பது குறித்தும், கழிவுகளை அகற்றுவது குறித்தும், வெகுஜன ஊடகங்களில் மாநகராட்சி விளம்பரப்படுத்த வேண்டும்.
சென்னை மாநகரில் குப்பை அகற்றும் பிரச்னையில், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாநகராட்சியுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியமும், மாநகராட்சியும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை வரும் 15ல் நடக்கும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

