ADDED : ஜூலை 07, 2026 04:51 PM

வால்பாறை: அதிரப்பள்ளி அருவிக்கு செல்லும் ரோட்டில், கபாலி யானை அடிக்கடி வாகனங்களை வழிமறிப்பதால் சுற்றுலாபயணியர் பீதியடைந்துள்ளனர்.
வால்பாறை வரும் சுற்றுலா பயணியம், கேரள மாநிலம் சாலக்குடி வழித்தடத்தில் உள்ள அதிரப்பள்ளி அருவிக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், அதிரப்பள்ளி அருவிக்கு செல்லும் ரோட்டில், கடந்த சில மாதங்களாக ‘கபாலி’ என்று பெயரிடப்பட்ட யானை நடமாடுகிறது. பகல், இரவு நேரத்தில், ரோட்டில் நடமாடுவதால் சுற்றுலாபயணியர் பீதியடைந்துள்ளனர்.
இந்நிலையில், கேரளாவில் பருவமழைக்கு பின் குளுகுளு சீசன் துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணியர் அதிக அளவில் செல்கின்றனர். நேற்று முன்தினம் காலை அதிரப்பள்ளி ரோட்டில் முகாமிட்ட ‘கபாலி’ யானை ரோட்டை வழிமறித்து நின்றது.
இதனால், சிறிது நேரம் வால்பாறை – அதிரப்பள்ளி ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன் பின், யானை ஒதுங்கி நின்றதால், வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது.
வனத்துறையினர் கூறியதாவது, ‘கபாலி என்ற யானை, பொதுவாக ரோட்டில் நின்றாலும் வாகனங்கள் வரும் போது, அதுவாகவே வழிவிட்டு ஒதுங்கி நிற்கிறது. வால்பாறையிலிருந்து அதிரப்பள்ளி அருவிக்கு வரும் சுற்றுலா பயணியர் இருசக்கர வாகனங்களில் மிகவும் கவனமாக வந்து செல்ல வேண்டும்,’ என்றனர்.
