/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜி.பி.எஸ்., நோய் அறிகுறி; கண்காணிக்க உத்தரவு
/
ஜி.பி.எஸ்., நோய் அறிகுறி; கண்காணிக்க உத்தரவு
ADDED : பிப் 26, 2025 04:14 AM
கோவை; 'கிலன் பார் சிண்ட்ரோம்' (ஜி.பி.எஸ்.,) தொற்று பாதிப்பு குறித்த அறிகுறிகளை கண்காணித்து, உடனுக்குடன் தகவல்களை பகிர, மாவட்ட சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய அனைத்து பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியில், ஜி.பி.எஸ்., பாதிப்பு 100க்கும் மேற்பட்டவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக சுகாதாரத்துறை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இப்பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு, உடலின் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு, தசைகளுக்கு உணர்வூட்டும் நரம்புகளில், செயலிழப்பு ஏற்படுகிறது. தொடர்ந்து பக்கவாத பாதிப்பையும் ஏற்படுத்துகிறது.
குழந்தைகளும் இப்பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். முறையாக சமைக்கப்படாத இறைச்சி, கொதிக்க வைக்கப்படாத தண்ணீரில் உள்ள பாக்டீரியாக்கள் காரணமாக, இப்பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுசாமி கூறுகையில், ''ஜி.பி.எஸ்., பாதிப்பு அறிகுறிகளுடன் வருபவர்களை கண்காணிக்க, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும். இறைச்சிகளை உயர் கொதிநிலையில் வேகவைக்க வேண்டியது அவசியம்.
''அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். கோவையில் இதுவரை ஜி.பி.எஸ்., பாதிப்பு பதிவாகவில்லை. தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.

