/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில்களில் இன்று மகா சிவராத்திரி விழா
/
கோவில்களில் இன்று மகா சிவராத்திரி விழா
ADDED : பிப் 26, 2025 04:20 AM
கோவை மாவட்டத்தில் உள்ள, அனைத்து சிவன் கோவில்களிலும், இன்று மகா சிவராத்திரி விழா, கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், இன்று மாலை 6:00 மணி முதல் நாளை காலை, 6:00 மணி வரை தொடர்ந்து பல்வேறு இசை நிகழ்ச்சிகளும், சிவராத்திரி பூஜைகளும் நடக்கிறது.
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், நான்கு கால பூஜை நடக்கிறது. இன்று இரவு 9:00 முதல் 11:00 மணி வரை முதல் கால பூஜையும்; இரவு, 11:00 முதல் நள்ளிரவு 1:00 மணி வரை, இரண்டாம் கால பூஜையும்; நள்ளிரவு, 1:00 முதல் அதிகாலை 3:00 மணி வரை மூன்றாம் கால பூஜையும்; அதிகாலை 3:00 முதல் 4:30 மணி வரை, நான்காம் கால பூஜையும் நடக்கிறது.
மாலை 6:00 மணிக்கு, சிவராத்திரி இசை நிகழ்ச்சி, மங்கள இசை நாதஸ்வரம், தவில் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. தொடர்ந்து பரதநாட்டியம் யோகா, பக்தி சொற்பொழிவு, சிலம்பாட்டம், பட்டிமன்றம், கிராமிய கலை நிகழ்ச்சி, ஆன்மிக விவாத அரங்கம், பக்தி இன்னிசை நிகழ்ச்சி என, தொடர்ந்து 12 மணி நேரமும் நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
அதேபோல, தென் கைலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு, இரவு முழுவதும், சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
இரவு முழுவதும் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும். மகா சிவராத்திரி முன்னிட்டு, இன்று ஏராளமான பக்தர்கள், வெள்ளியங்கிரி மலையேறி, ஏழாவது மலை உச்சியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க உள்ளனர்.

