/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எண்ணெய் குழாய் பதிக்கும் பணி தவறான தகவல்; விவசாயிகள் எதிர்ப்பு
/
எண்ணெய் குழாய் பதிக்கும் பணி தவறான தகவல்; விவசாயிகள் எதிர்ப்பு
எண்ணெய் குழாய் பதிக்கும் பணி தவறான தகவல்; விவசாயிகள் எதிர்ப்பு
எண்ணெய் குழாய் பதிக்கும் பணி தவறான தகவல்; விவசாயிகள் எதிர்ப்பு
ADDED : பிப் 10, 2025 05:36 AM

சூலுார், : பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில், ஐ.டி.பி.எல்., நிறுவனம் இருகூரில் இருந்து, கர்நாடக மாநிலம் தேவனஹந்தி வரை எண்ணெய் குழாய் பதிக்கும் பணியை மேற்கொண்டது.
அதில், இருகூரில் இருந்து, திருப்பூர் மாவட்டம் முத்துார் வரை விளை நிலங்களில் குழாய் பதிக்கும் பணிக்கு, கோவை, திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தினர்.
கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனால், பணிகள் நிறுத்தப்பட்டன. எண்ணெய் குழாய்களை சாலை ஓரமாக பதிக்க வலியுறுத்தி, கடந்த, 75 நாட்களாக பல்வேறு கிராமங்களில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், பெட்ரோலிய குழாய் பதிக்கும் பணி நிறைவடைந்துள்ளதாகவும், நில உரிமையாளர்களுக்கான இழப்பீட்டு தொகையை, உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, 15 நாட்களுக்குள் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தி விவசாயிகளுக்கு, நிலம் எடுப்பு திட்ட துணை ஆட்சியர் கடிதங்களை அனுப்பி உள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயி ரவிக்குமார் கூறுகையில், ''குழாய் பதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால், பணிகள் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஆனால், பணிகள் முடிந்து விட்டது. இழப்பீடு பெற்றுக்கொள்ளுங்கள், என, தவறான தகவல்களை கூறி கடிதம் அனுப்பி உள்ளனர். இதை ஏற்க முடியாது.
சாலை ஓரமாக குழாய்களை பதிக்க கோரி, அமைச்சர்களிடமும், கலெக்டரிடமும், பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம்,'' என்றார்.

