மதுரை ரயிலை போடி வரை நீட்டிக்க கொங்கு மண்டல மக்கள் எதிர்பார்ப்பு
மதுரை ரயிலை போடி வரை நீட்டிக்க கொங்கு மண்டல மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 04, 2026 03:40 PM

கோவை: தேனி, போடிநாயக்கனுார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கல்வி, வேலைவாய்ப்பு, வணிகம், விவசாயம் தொடர்பான பணிகளுக்கும், மருத்துவ தேவை போன்ற காரணங்களுக்காக கோவை வந்து செல்கின்றனர்.
கோவையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ரயில் போக்குவரத்து குறைவு என்பதால் பஸ் போக்குவரத்தையே நம்பியிருக்க வேண்டியுள்ளது.
குறிப்பாக, கோவையில் இருந்து போடிக்கு நேரடி ரயில் சேவை இல்லை. கோவையில் இருந்து போத்தனுார், பொள்ளாச்சி, பழநி, திண்டுக்கல் வழியாக மதுரைக்கு எக்ஸ்பிரஸ் ரயில்(16721/16722) இயக்கப்படுகிறது. இந்த ரயிலை போடி வரை நீட்டித்தால் பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர் பயணிகள்.
‘‘இந்த ரயிலை நீட்டித்தால் விவசாயிகள், வணிகர்கள் தங்களது விவசாய விளைபொருட்களை முக்கிய சந்தைகளுக்கு கொண்டு செல்லவும், குறைந்த செலவில் பயணம் செய்யவும் உதவும்.
தற்போது மதுரையில் ரயில் மாற வேண்டியது அல்லது பஸ் போக்குவரத்தை நாட வேண்டிய நிலை உள்ளது. ‘மீட்டர் கேஜ்’ ஆக இருந்தபோது கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக போடிக்கு நேரடி ரயில் இயக்கப்பட்டது. பின்னர் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகிறது.
ஆனால் அந்த ரயில் சேவை மீண்டும் துவங்கப்படவில்லை. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்டத்திடம் முறையிட்டுள்ளோம்,’’ என்கிறார், போத்தனுார் ரயில் பயனாளர்கள் நலச்சங்க பொதுச்செயலாளர் சுப்ரமணியன்.
