/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாசாணியம்மன் கோவிலில் பாதுகாப்பு குறித்து ஆய்வு
/
மாசாணியம்மன் கோவிலில் பாதுகாப்பு குறித்து ஆய்வு
ADDED : பிப் 10, 2025 05:54 AM

ஆனைமலை : ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், குண்டம் திருவிழாவை முன்னிட்டு, மயான கரை மற்றும் குண்டம் உள்ளிட்ட இடங்களில் சப் - கலெக்டர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா, கடந்த, 29ம் தேதி கொடியேற்றதுடன் துவங்கியது. வரும், 11ம் தேதி நள்ளிரவு மயான பூஜை நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து சப் - கலெக்டர் கேத்ரின் சரண்யா தலைமையில், பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி மற்றும் அதிகாரிகள் மயான பூஜை நடைபெறும் பகுதியில் ஆய்வு செய்தனர்.
துாய்மை பணிகளை பார்வையிட்ட சப் - கலெக்டர், பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்புகள் அமைத்தல், மின்விளக்குகளை புதிதாக அமைத்தல், பக்தர்களுக்கு குடிநீர் வழங்குதல் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். மேலும், குண்டம் நடைபெறும் பகுதியை பார்வையிட்டார்.
கோவில் நுழைவுவாயிலில், தேர் உலா செல்லும் பாதையை சீரமைக்கும் பணியை பார்வையிட்டார். டி.எஸ்.பி., ஸ்ரீநிதி, முன்னாள் பேரூராட்சி தலைவர் சாந்தலிங்ககுமார், கோவில் முறைதாரர் மனோகர் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

