ADDED : ஜூலை 02, 2026 04:20 PM

வால்பாறை: வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான அறிமுக பயிற்சி திட்டம் துவக்க விழா, கல்லுாரி கலையரங்கில் துவங்கியது. கணினி பயன்பாட்டுத்துறை உதவி பேராசிரியர் வேலுசாமி வரவேற்றார்.
கல்லுாரி முதல்வர் கோபி தலைமை வகித்து பேசியதாவது:
மாணவர்கள் பள்ளி வாழ்க்கை முடிந்த பின், கல்லுாரி வாழ்க்கை துவங்கியுள்ளது. கல்லுாரி விதிமுறைகளை மாணவர்கள் தவறாமல் கடைபிடித்து, நாள் தோறும் தவறாமல் கல்லுாரிக்கு வரவேண்டும்.
கல்லுாரி வாழ்க்கையின் போது நல்ல நண்பர்களை தேடுங்கள், உங்களை ஒரு போதும் யாருடனும் ஒப்பிடாதீர்கள். மொபைல்போன் பயன்பாட்டை குறைத்து, படிப்பில் போதிய கவனம் செலுத்த வேண்டும். கல்லுாரி நுாலகத்தை பயன்படுத்துங்கள். அன்றாட நாட்டு நடப்புக்களை அறிந்திட நாளிதழ்கள் படிக்க வேண்டும்.
இவ்வாறு, பேசினார்.
வால்பாறை இன்ஸ்பெக்டர் ராமசந்திரன் பேசுகையில், ‘‘கல்லுாரி படிப்பு, வாழ்க்கையில் மிக முக்கியமான தருணம். எந்த சூழ்நிலையிலும் மாணவர்கள் போதை பொருளுக்கு அடிமையாகக்கூடாது. படிக்கும் வயதில் மனதில் தேவையற்ற சிந்தனைகளை வளர்க்கக்கூடாது. லட்சியத்துடன் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்,’’ என்றார். ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் செல்வசேகர் நன்றி கூறினார்.
