755 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் அதிகாலை 3 மணி முதல் நடந்த ஆபரேஷன்
755 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் அதிகாலை 3 மணி முதல் நடந்த ஆபரேஷன்
ADDED : ஜூலை 04, 2026 05:44 AM

கோவை: உக்கடம் போலீசாருக்கு, பெங்களூரில் இருந்து பார்சல் சேவை மூலம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா கடத்தப்பட்டு, கோவை முழுவதும் விநியோகம் செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
உக்கடம் தனிப்படை போலீசார், நேற்று அதிகாலை 3 மணி முதலே ஆம்னி பஸ்கள் வரும் பகுதியில், மப்டியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
காலை நேரத்தில் பெங்களூரில் இருந்து வந்த ஆம்னி பஸ்சில் இருந்து சந்தேகத்திற்கிடமான பார்சல்கள் இறக்கப்பட்டு, அவை ஒரு காரில் ஏற்றப்பட்டன. உடனே போலீசார் அந்த காரை மறிக்காமல், ரகசியமாக பின்தொடர்ந்தனர்.
அந்த கார் செட்டி வீதியில் உள்ள ஒரு குடோனுக்குள் நுழைந்ததும், போலீசார் சுற்றிவளைத்து சோதனை நடத்தினர். குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 752 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், 3 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக, ராஜஸ்தானைச் சேர்ந்த கன்பரண்ட், 26 காளப்பட்டியில் வாடகை அறையில் தங்கியிருந்தவர் மற்றும் தாமஸ் வீதியைச் சேர்ந்த தங்கப்பட்டறை தொழிலாளி மகேந்திரன், 32 ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
உதவி கமிஷனர் முருகேசன் கூறுகையில், சில நாட்களாகவே முக்கிய குற்றவாளியின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தோம். ஆனால் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்ட குடோன் எங்கு உள்ளது என்பது தெரியவில்லை. காளப்பட்டியில் 5 ஆயிரம் வாடகைக்கு தனி அறை எடுத்து தங்கி இந்த கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அவரை தொடர்ந்து கண்காணித்தோம். காலை பார்சலை காரில் ஏற்றிச் சென்றபோது ரகசியமாக பின்தொடர்ந்து செட்டி வீதியில் உள்ள குடோனை கண்டுபிடித்து, அங்கிருந்த அனைத்து பொருட்களையும் பறிமுதல் செய்தோம், என்றார்.
உக்கடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
