/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊருக்குள் புகுந்த மான் கூட்டம்
/
ஊருக்குள் புகுந்த மான் கூட்டம்
ADDED : மார் 19, 2024 11:57 PM

மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் உப்பு பள்ளம் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் மான் கூட்டம் புகுந்தது. அவற்றை நாய்கள் துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தற்போது வெயில் வாட்டி வதைப்பதால், மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குளம், குட்டை உள்ளிட்ட நீர் ஆதாரங்கள் வறண்டு வருகின்றன.
குறிப்பாக வற்றாத ஜீவ நதியாக கருதப்படும், பவானி ஆறு மிகவும் வேகமாக வறண்டு வருகிறது. மேட்டுப்பாளையம் வனப்பகுதிக்குள் நிலவும் கடும் வறட்சி காரணமாக மான், யானை உள்ளிட்ட வன விலங்குகள் கூட்டம் கூட்டமாக தண்ணீரை தேடி, ஊருக்குள் வருவது தொடர் கதையாகி வருகிறது.
மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் சாலை வழியில் உப்பு பள்ளம் பகுதி உள்ளது. இங்கு பாக்கு, தென்னை பிரதான விவசாயமாக செய்யப்படுகிறது. இப்பகுதியில் நேற்று மதியம் 12 மணி அளவில் நூற்றுக்கும் மேற்பட்ட மான்கள் கூட்டமாக படையெடுத்தன. வீடுகள், பாக்கு தோப்பு வழியாக வந்த இந்த மான் கூட்டம் தண்ணீரை தேடி அங்கும் இங்கும் அலைந்தன. இதை பார்த்த தெரு நாய்கள், மான் கூட்டத்தை துரத்தின. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பின் உப்பு பள்ளம் அருகே மேட்டுப்பாளையம் - வனபத்ரகாளியம்மன் சாலையை மான் கூட்டம் கடந்து பவானி ஆற்றை நோக்கி ஓடின. நாய்கள் துரத்தியதால் மான்கள் சில மீண்டும் ஊருக்குள் உள்ள மற்ற தோட்டங்களுக்குள் சிதறி ஓடின. இச்சம்பவத்தை அச்சாலை வழியாக செல்வோர் வாகனங்களை நிறுத்தி வேடிக்கை பார்த்தனர். சிலர் நாய்களை கல் வீசி விரட்ட முயன்றனர்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில், வனவிலங்குகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய அடர் வனப்பகுதியில் 18 தண்ணீர் தொட்டிகள், 20க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. 9 இடங்களில் குட்டைகள் உள்ளன. தினமும் தொட்டிகளில் தண்ணீர் தீராத வகையில், நிரப்பப்படுகின்றன.
சில சமயங்களில் வழிதவறி மான் கூட்டம் ஊருக்குள் வந்து விடுகின்றன. அவ்வாறு வரும் எந்த வனவிலங்கையும் மக்கள் தொந்தரவு செய்யக்கூடாது. உடனே வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
மான் உள்ளிட்ட அனைத்து வனவிலங்குகளும் ஊருக்குள் வராமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு, வனவிலங்குகள் நடமாட்டம் தொடர்பாக தொடர் கண்காணிப்பில் வன ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர், என்றார்.
இதுகுறித்து வன ஆர்வலர்கள் கூறுகையில், வனத்துறையினர் வனவிலங்குகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஊருக்குள் தண்ணீரை தேடி வரும் வனவிலங்குகளால் மனித வனவிலங்கு மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. வனத்துறை மிகவும் துரிதமாக செயல்பட வேண்டும், என்றனர்.

