/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மனித உணர்வுகள் நிரம்பி இருக்கும் 'வெண்முரசு'
/
மனித உணர்வுகள் நிரம்பி இருக்கும் 'வெண்முரசு'
ADDED : டிச 07, 2025 07:24 AM

வா சகர்கள் வாசிக்க வேண்டிய புத்தகங்கள் குறித்து, வாசித்தவர்கள் தங்களின் வாசிப்பு அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்கின்றனர். இந்த வாரம் எழுத்தாளர் ஜெயமோகன், மகாபாரதத்தை மையமாக வைத்து எழுதிய, 'வெண்முரசு' நாவல் குறித்து கவிஞர் செந்தமிழ்த்தேனீ, தனது வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். வேத வியாசரால் படைக்கப்பட்ட மகாபாரதம், அதன் மூலக்கதை மாறாமல் மராத்தி, ஒரியா, கன்னடம், தெலுங்கு மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் மறு ஆக்கம் செய்து எழுதி உள்ளனர்.
இதில் மலையாளத்தில் பி.கே.பாலகிருஷ்ணன் எழுதிய, 'இனி ஞான் உறங்கட்டே', எம்.டி.வாசுதேவநாயர் எழுதிய 'இரண்டாம் இடம்' இவை இரண்டும் முக்கியமான படைப்பாகும். தமிழில் எம்.வி.வெங்கட்ராமன் எழுதிய 'நித்திய கன்னி' எஸ்.ராமகிருஷ்ணனின் 'உபபாண்டவம்' நாவல்களும் மகாபாரதத்தை தழுவி எழுதப்பட்டவை.
இப்போது மகாபாரதத்தை மையமாக வைத்து எழுத்தாளர் ஜெயமோகன் எழுதி உள்ள, 'வெண்முரசு' நாவல் மேலே குறிப்பிட்ட அனைத்தையும் மிஞ்சி நிற்கும் படைப்பாக இருக்கிறது. ஆறு பாகங்கள், 26 தலைப்புகள், 25 ஆயிரம் பக்கங்கள் கொண்ட நாவலாக வெளி வந்துள்ளது.
உலகில் இதுவரை யாரும், எந்த மொழியிலும்ம் இப்படி ஒரு நாவலை, இத்தனை பக்கங்களில் எழுதவில்லை. தமிழில் ஜெயமோகன் மட்டுமே படைத்து இருக்கிறார். இது தமிழுக்கு கிடைத்து இருக்கும் பெருமை.
மகாபாரதத்தில் முக்கிய பாத்திரங்களை விரிவாக விளக்கி எழுதி இருக்கிறார். திருக்குறளில் அறம் முதன்மையாக இருப்பது போல், வெண்முரசில் மனித உணர்வுகள் நிரம்பி இருக்கின்றன. அம்பை கதாபாத்திரத்தை மிகவும் உணர்வுபூர்வமாக எழுதி இருக்கிறார்.
வெண்முரசில் வரும் முதற்கனல், இந்திரநீலம், மழைப்பாடல், பிரயாகை, நீலம், காண்டீபம், வண்ணக்கடல், வெய்யோன் உள்ளிட்ட பல தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளன. அனைத்தும் நல்ல இலக்கிய தரமானவை.
' அவன் கடந்த போது, குளத்து தாமரைகள் திரும்பி பார்த்தன', 'அவன் அருகில் வந்த போது அத்தனை மூங்கில்களும் இசைக்க துவங்கின' என்பன போன்ற கவித்துவமான வரிகள் நாவல் முழுவதும் நிறைய உள்ளன.
நான் வெண்முரசின் அத்தனை பாகங்களையும் முழுமையாக படித்து விட்டேன். இலக்கிய வாசிப்பிலும், ஆர்வம் உள்ளவர்கள் வெண்முரசு நாவலை அவசியம் வாசிக்க வேண்டும்.
இலக்கிய ரசனையோடு படித்தால், ஒரு மகத்தான இலக்கிய படைப்பை படித்து முடித்த திருப்தி கிடைக்கும். எனக்கு அந்த திருப்தி கிடைத்து இருக்கிறது.

